நாகையில் இருந்து யாழ்ப்பாணம் வந்தது சிவகங்கை கப்பல்!

22 மாசி 2025 சனி 15:02 | பார்வைகள் : 217
நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இன்று காலை இலங்கை காங்கேசன்துறையை , சிவகங்கை கப்பல் வந்தடைந்தது.
தமிழகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலானது இன்று மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இந்தியா – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், காலநிலை காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று துவங்கும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது.
3 மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் ஆரம்பித்ததால், இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த கப்பலானது இன்று மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
அத்துடன் இந்த கப்பல் சேவையானது செவ்வாய் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களும் இடம்பெறும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.