காதல் பாதி காமெடி பாதி; 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' விமர்சனம்

23 மாசி 2025 ஞாயிறு 09:58 | பார்வைகள் : 189
சமையல் கலை படிக்கும் பவிஷ் நாராயண் பெரிய பணக்கார வீட்டு பெண்ணான அனிகா சுரேந்திரனை காதலிக்கிறார். இவர்களின் காதலுக்கு அனிகாவின் தந்தை சரத்குமார் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இருப்பினும் அனிகாவின் ஸ்ட்ராங்கான லவ் காரணமாக திருமணம் வரை செல்கிறது. திடீரென அனிகாவை பிரேக் அப் செய்கிறார் பவிஷ். அந்தக் கோபத்தில் வேறு ஒருவருடன் அனிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்ப டுகிறது. இதற்கிடையே பவிஷ் உடன் பள்ளியில் படித்த தோழியை இருவிட்டு பெற்றோர்களும் பார்த்து பவிஷுக்கு திருமணம் முடிக்க நினைக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அனிகா திருமண பத்திரிக்கை பவிஷுக்கு வருகிறது. அதன்பிறகு என்ன நடந்தது? பவிஷ், அனிகா திருமணங்கள் நடந்ததா? எதற்காக அனிகாவை பவிஷ் பிரேக் அப் செய்தார்? என்பதை படத்தின் மீதி கதை.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற கவித்துவமான டைட்டிலுக்கு கதையில் நியாயம் சேர்த்துள்ளார் இயக்குனர் தனுஷ். இன்றைய ஜென் ஷி, ஆல்பா பீட்டா என இளைய தலைமுறையின் முகங்களாக திரையில் தெரிய வைத்துள்ளார். இளசுகளின் காதல், பிரேக் அப், பேட்ச் அப், எக்ஸ் லவ்வர், பார்ட்டி, என அத்தனையும் காட்சிகளிலும் வசனங்களிலும் புகுத்தி தானும் கரண்ட் இயக்குனர் என நிரூபித்துள்ளார்.
ஹீரோவாக நடித்துள்ள பவிஷ் நாராயண் ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் போன்றே திரையில் தெரிகிறார். அவருடைய உடல் மொழி, வசன உச்சரிப்பு, நடனம் என அனைத்தும் அவருடைய மாமாவை (தனுஷ்) பல இடங்களில் ஞாபகப்படுத்துகிறது . மற்றபடி முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பரிட்சயமான அனிகா சுரேந்திரன் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவரும் தன்னுடைய பங்கிற்கு அழகான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். பவிஷ் நண்பனாக வரும் மேத்யூ தாமஸ் வசனங்கள் காமெடியாக இருப்பதுடன் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. அதேபோல் மற்ற கேரக்டர்களாக நடித்துள்ள பிரியா பி.வாரியார், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்த ஷங்கர், ராபியா கதூன் ஆகியோரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்.
அனிகா அப்பாவாக நடித்துள்ள சரத்குமார் கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் பதிகிறார். அதேபோல் பவிஷ் பெற்றோராக நடித்துள்ள ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன் இருவரும் அனுபவம் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. குறிப்பாக கோல்டன் ஸ்பேரோ பாடல் செம மாஸ். பின்னணி செய்யும் யூத்தாக உள்ளது.
லியான் பிரிட்டோவின் ஒளிப்பதிவில் அத்தனை பேரும் அழகாக திரையில் தெரிகின்றனர். இரவு நேர சென்னை மற்றும் கோவாவை அழகாக காட்டியுள்ளார்.