Paristamil Navigation Paristamil advert login

தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

23 மாசி 2025 ஞாயிறு 13:44 | பார்வைகள் : 240


தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டவர்கள் இருக்கும் இடத்தை இன்னும் கண்டறிய முடியவில்லை என மீட்புப் படை அதிகாரி சுகேந்து தெரிவித்தார்.

தெலுங்கானாவின் நாகர் கர்னுால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்கட்டு பகுதியில் இருந்து, பிற இடங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் உள்ளது.இந்த கால்வாய் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

வழக்கம் போல் பணியில் ஈடுபட, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் நேற்று சென்றனர். அவர்கள், 12 கி.மீ., துாரம் சென்று பணியில் ஈடுபட்ட நிலையில், சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்த விபத்தில், எட்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.இரவு பகலாக மீட்பு பணி தொடர்கிறது.

இது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி சுகேந்து கூறியதாவது: நேற்று இரவு 10 மணியளவில், நிலைமையை ஆய்வு செய்ய சுரங்கப்பாதைக்குள் சென்றோம். சுரங்கப் பாதையின் உள்ளே இருந்த 13 கி.மீ தூரத்தில், 11 கி.மீ தூரம் வரை சிக்கிய தொழிலாளர்களின் பெயர்களைக் கூறி, தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

குப்பைகளால் நிரப்பப்பட்ட 200 மீட்டர் பகுதி உள்ளது. இந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படும் வரை, சிக்கிய தொழிலாளர்களின் சரியான இடத்தைக் கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுவது சவாலாக இருக்கிறது.

சுரங்கப்பாதையின் உள்ளே தண்ணீர் இருக்கிறது. சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்க, முதலில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பின்னர் குப்பைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். விபத்து குறித்து, தொலைபேசியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்