ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும் மனம் இல்லை: ஸ்டாலினை வறுத்தெடுத்த அன்புமணி

24 மாசி 2025 திங்கள் 03:37 | பார்வைகள் : 151
மூன்று முறை ஜாதிவாரி கணகெடுப்பு நடத்த வாய்ப்பு கிடைத்தும், சிலரின் சதியால் தமிழகத்தில் நடத்தப்படவில்லை,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில், சோழ மண்டல சமய - சமுதாய நல்லிணக்க மாநாடு நேற்று நடந்தது.
யாரும் எதிரி இல்லை
இதில், பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
இங்கு நடக்கும் மாநாடு டிரெய்லர் தான். மெயின் பிக்சர் மே. 11ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. நாம் யாருக்கும் எதிரி கிடையாது. நமக்கும் யாரும் எதிரி இல்லை.
ஏழ்மை, அறியாமை, மது, போதை தான் நமக்கு எதிரி. இதை அழிக்க வேண்டும் என போராடி வருகிறோம். தி.மு.க., இரண்டு சமுதாயத்தை பிரித்து ஆட்சிக்கு வருகிறது. அதனால், நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், நாங்கள் கேட்பது, ஜாதிவாரி கணகெடுப்பை நடத்தி, நுாறு சதவீத மக்களுக்கும் இட ஒதுக்கீட்டை வழங்குங்கள் என்பது தான். தெலுங்கானா, பீகார் மாநிலங்களில் ஜாதிவாரி கணகெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீடு மட்டுமில்லை. சமூக நல திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளனர். இது தான், தமிழகத்திலும் நடக்க வேண்டும்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார். தற்போதைக்கு அதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை என்றாலும், அதை விரைவில் உருவாக்குவோம்.
தமிழகத்தில், அனைத்து பின்தங்கிய சமூகத்தவரையும் ஒன்று சேர்த்து, தமிழகத்துக்கு தேவையில்லாத தி.மு.க., ஆட்சியை வீழ்த்துவோம். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும்.
கருணாநிதிக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மனமிருந்தது. அதனால் தான் ராமதாசுடன் இணைந்து சமூக நீதிக்காக நிறைய விஷயங்களை செய்தார். ஆனால், அவர் மகன் ஸ்டாலினுக்கு அதிகாரம் இருந்தும் மனம் இல்லை.
மனிதனுக்கிடையே உள்ள ஜாதியை அகற்றவே போராடுகிறோம். பின் தங்கியவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு பெற்றால் ஜாதி ஒழியும். பா.ம.க., அனைத்து ஜாதியினருக்குமான பொதுவான இயக்கம்.
விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கு பாதுகாப்பான இயக்கமாக இருப்பது பா.ம.க., தான். டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க செய்தது நிர்பந்தம் கொடுத்தது பா.ம.க.,தான். ஆனால் விவசாயிகள் ஏன், பா.ம.க.,வுக்கு ஓட்டளிக்க மறுக்கின்றனர் என புரியவில்லை.
ஏற்றத்தாழ்வு
பா.ம.க, நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
இந்தியாவில், 4,694 ஜாதிகள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 364. இந்த 364 ஜாதிகளும் முன்னேறினால் தான், தமிழகம் முன்னேறும். ஒரு சமத்துவமான சமூகத்தை அடைய முடியும். ஆனால், இதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. இதனால் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்கிறோம்.
மூன்று முறை ஜாதிவாரி கணகெடுப்பு நடத்த வாய்ப்பு கிடைத்தும், சிலரின் சதியால் நடைபெறவில்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு; நீதிமன்றங்கள் குறுக்கீடு இல்லை. இருந்தும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடக்கவில்லை; தமிழகம் தயங்குகிறது.
இவ்வாறு அவர்கள் பேசினார்.