விராட் கோலியின் அசத்தல் சதம்! பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

24 மாசி 2025 திங்கள் 08:50 | பார்வைகள் : 173
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ஓட்டங்களும், கேப்டன் ரிஸ்வான் 46 ஓட்டங்களும், குஷ்தில் ஷா 38 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
242 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர்.
ரோஹித் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி, இளம் வீரர் ஷுப்மன் கில்லுடன் இணைந்து 69 ஓட்டங்கள் சேர்த்தார்.
துரதிஷ்டவசமாக ஷுப்மன் கில் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி-ஸ்ரேயாஸ் ஐயர் 114 ஓட்டங்கள் குவித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 56 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
விராட் கோலி 111 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி தனது 51வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
287 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அத்துடன் சதத்தின் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார்.