இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றச்சாட்டு

24 மாசி 2025 திங்கள் 09:12 | பார்வைகள் : 327
இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றம்சாட்டி, பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தப்படி, தங்களது பிடியில் உள்ள பணயக்கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்கள் உடல்களை சமீபத்தில் ஒப்படைத்தது.
காசாவில் அணிவகுப்பு நடத்தி இஸ்ரேலியர்களின் உடல்களை அவமதிக்கும் வகையில் ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
அத்துடன் இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் தெரிவித்தது. அதன் பின்னர் நேற்று முன்தினம், மேலும் 6 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது.
விடுதலை நடவடிக்கையின்போது காரில் அழைத்து வரப்பட்ட இரு பணயக்கைதிகள் கெஞ்சுவது போன்ற வீடியோவையும் ஹமாஸ் வெளியிட, ஆத்திரமடைந்த இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டதாக குற்றம்சாட்டியது.
மேலும், 620 பாலஸ்தீனிய பணயக்கைதிகளை விடுவிக்க மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தையும் தற்காலிகமாக இஸ்ரேல் நிறுத்தியது.
இந்த நிலையில் இஸ்ரேலின் முடிவால் அதிருப்தியடைந்த ஹமாஸ், "இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது. பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யாதவரை, இஸ்ரேலுடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை" என தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தங்களது பாதுகாப்புப்படையினரை தயார் நிலையில் இருக்கும்படி இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, காசா முனையில் ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.