Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., மொழிக்கொள்கை பிரசாரம் மக்களை ஏமாற்றும் செயலாகும்: கிருஷ்ணசாமி

தி.மு.க., மொழிக்கொள்கை பிரசாரம் மக்களை ஏமாற்றும் செயலாகும்: கிருஷ்ணசாமி

25 மாசி 2025 செவ்வாய் 03:25 | பார்வைகள் : 206


தி.மு.க.,வின் மொழிக்கொள்கை பிரசாரம் மக்களை ஏமாற்றும் செயல், என, விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.

விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த இட ஒதுக்கீடு மீட்புக்கருத்தரங்கம், நிர்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

மாஞ்சோலை தேயிலை கம்பெனி மூடப்படுவதற்காக அங்கு பூர்வீகமாக வாழ்ந்தவர்களை வெளியேற்ற முயன்றால் போராட்டம் நடத்தப்படும். தேசிய அளவில் உருவாக்கப்படும் கல்வி கொள்கையின் அடிப்படையில் தான் மாநில அரசின் கல்விக்கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

மும்மொழி என்பதை ஏழை மக்களின் குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என கூறுவது எந்த வகையில் நியாயம்.

ஹிந்தியை யாரும் திணிப்பதில்லை. மத்திய அரசின் பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே ஹிந்தி கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதற்கு பின் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் ஹிந்தி கிடையாது.

ஒரு காலத்தில் மொழியை வைத்து அரசியல் செய்வது தி.மு.க.,விற்கு சில வாய்ப்புகளை கொடுத்திருக்கலாம். ஆனால் 21ம் நுாற்றாண்டில் ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் உருவாகிய காலகட்டத்தில் பல மொழிகளை கற்றுக்கொண்டால் தான் வாய்ப்புகள் உருவாகும். ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு, லத்தீன், ரஷ்யா மொழிகளை கற்றுக்கொண்டால் வேலை வாய்ப்புகளை நோக்கி மாணவர்கள் முன்னேற முடியும். தமிழக ஏழை குழந்தைகள் ஹிந்தியை கற்றுக்கொள்வதால் முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க.,வுக்கும் என்ன கஷ்டம் வரப் போகிறது. மேலும் நாங்களும் திராவிடப்பாதையில் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஜால்ரா தட்டுகிறார்.

தி.மு.க., கையில் எடுக்கும் மொழிக்கொள்கை பிரசாரம் மக்களை ஏமாற்றும் செயல். மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் தமிழக மாணவர்களின் பங்கு குறைவதற்கு மாநில அரசின் தவறான மொழிக்கொள்கையே காரணம்.

விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவில் கனிம வளக்கொள்ளை நடந்து வருகிறது. பட்டாசு விபத்துகளை தடுப்பதற்கு தீர்வுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.,வின் பித்தலாட்டம்

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: செய்ய முடியாதைவைகளை மட்டுமே வாக்குறுதியாக தி.மு.க., வழங்கியுள்ளது. நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் நிறுத்தி விடுவோம் என்றார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவோம் என்றார்கள். நாடு முழுவதும் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி செய்ய முடியாதவைகளை சொல்வது தான் தி.மு.க., வின் பித்தலாட்டம்.ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையோரப்பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. ஆளும் கட்சியினர் ஆதரவுடன் நடப்பதாக தகவல்கள் வருகிறது. மத்திய அரசின் உளவுத்துறையினர் தனிப்படை அமைத்து கடத்தலை தடுக்காவிட்டால் தேச விரோத செயல்கள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்