அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த..தடை!

25 மாசி 2025 செவ்வாய் 03:27 | பார்வைகள் : 203
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக தாக்கலான வழக்கில், 'மார்ச் 24 வரை எவ்வித போராட்டத்திலும் ஜாக்டோ - ஜியோ ஈடுபடக்கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பல்வேறு கோரிக்கைகள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், மாநிலம் முழுதும் வேலை நிறுத்தம், சாலை மறியலில் இன்று ஈடுபட உள்ளனர்.
கோரிக்கைகளை ஏற்கும்படி, அரசுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. நான் அரசை ஆதரிக்கவில்லை. அதேநேரத்தில், ஜாக்டோ - ஜியோவை ஊக்குவிக்கவும் இல்லை.
வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளன. அதை மீறி, ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதம்.
இவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், அது அவர்களுக்கும், அரசிற்கும் இடையிலான பிரச்னை. சாலை மறியல் நடந்தால் போக்குவரத்து பாதிக்கும்; பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பிற வேலைகளுக்கு செல்வோர் பாதிப்படைவர்.
மறியலில் ஈடுபடுபவர்களை கைது செய்து, திருமண மண்டபங்களில் போலீசார் தங்க வைப்பர். அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதி செய்ய வேண்டும். இதனால், அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது.
நிரந்தர பணி நீக்கம்
வேலை நிறுத்தமானது, தமிழக அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளுக்கு எதிரானது. வேலை நிறுத்தம் செய்ய சட்டரீதியாக உரிமை இல்லை.
அரசு ஊழியர்கள் யாரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.
மக்கள் நலன் கருதி ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, போலீசார் வழக்கு பதிய வேண்டும். அவர்களை, தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு வாதம்:
ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளிடம், நான்கு அமைச்சர்கள் இடம்பெற்ற குழு பேச்சு நடத்துகிறது. மார்ச் 24 வரை அவகாசம் தேவை.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஜாக்டோ - ஜியோ சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என, உயர் நீதிமன்றம் 2018 டிசம்பரில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த அமைப்பு, மார்ச் 24 வரை எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது.
தமிழக தலைமை செயலர், வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர், பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை முதன்மை செயலர்கள், மனிதவள மேலாண்மை துறை செயலர் மற்றும் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். விசாரணை, மார்ச் 24க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.