இந்தியன் 3 படத்தில் இருந்து வெளியேறிய லைகா?

25 மாசி 2025 செவ்வாய் 08:09 | பார்வைகள் : 179
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் இந்தியன். இப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்தனர். கடந்த ஆண்டு திரைக்கு வந்த இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி அப்படக் காட்சிகளை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றி இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனை நெட்டிசன்கள் வச்சு செய்தனர்.
இந்தியன் 2 தோல்விக்கு பின் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படமும் படுதோல்வியை சந்தித்ததால், இந்தியன் 3 படத்திற்கான மார்க்கெட் சரிந்தது. இந்தியன் 2 படப்பிடிப்பின் போது இந்தியன் 3ம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர். இப்படத்திற்கான ஒரு பாடல் காட்சியை மட்டும் படமாக்க வேண்டி இருந்ததாம். அதுவும் அப்பாடலை சுமார் 20 கோடி பட்ஜெட்டில் படமாக்க திட்டமிட்டு இருந்தாராம் ஷங்கர். ஆனால் தற்போது அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்களாம்.
இந்தியன் 2 படம், எடுத்து முடிக்கும் முன்னரே லைகா நிறுவனத்துக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு இருவரும் கோர்ட் படி ஏறிய சம்பவங்களும் அரங்கேறின. பின்னர் ரெட் ஜெயண்ட் கையில் எடுத்த பின்னர் தான் அதன் ஷூட்டிங் முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது இந்தியன் 2 தோல்வியால் இந்தியன் 3 படத்துக்காக மேலும் செலவிட மறுத்துவிட்டதாம் லைகா. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது அப்படத்தை மீண்டும் ரெட் ஜெயண்ட் கையிலெடுத்துள்ளதாம். ஷங்கரிடம் பேசி பாடல் காட்சியே இல்லாமல் அப்படத்தின் பேட்ச் ஒர்க்கை மட்டும் முடித்து ரிலீஸ் செய்யுமாறு கூறிவிட்டார்களாம். இதனால் இந்தியன் 3 படத்தின் ரிலீஸ் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 புரமோஷனின் போதே தனக்கு இந்த படத்தை விட இந்தியன் 3ம் பாகம் தான் பிடிக்கும் என கமல்ஹாசன் கூறி இருந்தார். அதனால் இந்தியன் 2 படத்தில் இழந்ததை இந்தியன் 3 திரைப்படம் மீட்டுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.