ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் அரசுக்கு ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு

26 மாசி 2025 புதன் 03:48 | பார்வைகள் : 183
டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது மதுபான கொள்கை திருத்தப்பட்டதன் வாயிலாக, தனியார் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதே நேரத்தில் அரசுக்கு, 2,002 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டில்லி சட்டசபைக்கு இந்த மாதம் 5ம் தேதி நடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின்போது, 2021ல் மதுபான கொள்கை திருத்தப்பட்டது. இதில் பல மோசடிகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்தன.
இந்த மோசடி தொடர்பான வழக்கில், முதல்வராக இருந்த ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பல்வேறு திட்டங்கள் மற்றும் துறைகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கைகளை தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி அரசு அதை வெளியிடாமல் இருந்தது. சி.ஏ.ஜி., அறிக்கையில், மதுபான கொள்கை மோசடியில், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., அரசு சமீபத்தில் பதவியேற்றது. சட்டசபையின் முதல் கூட்டத்திலேயே, சி.ஏ.ஜி., அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என, அவர் கூறியிருந்தார். அதன்படி, மதுபான கொள்கை தொடர்பான சி.ஏ.ஜி., அறிக்கை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2021 நவ., முதல் 2022 செப்., வரை அமலில் இருந்த மதுபான கொள்கையால், அரசுக்கு, 2,002 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லைசென்ஸ் வழங்குவதில் குளறுபடி, குறிப்பிட்ட மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டது, அரசு கடைகளைவிட, தனியார் கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தது என, பல வகைகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
21 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்
டில்லி சட்டசபை கூட்டம் நேற்று துவங்கியதும், முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி தலைமையில், ஆம் ஆத்மி கட்சியினர் கோஷம் எழுப்பினர். அம்பேத்கரை பா.ஜ., அவமதிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.தொடர்ந்து அமளியில் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆதிஷ் உள்பட, 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை நேற்று ஒருநாள் முழுதும் சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார்.