தொகுதிகள் எண்ணிக்கை 8 குறையும்: மார்ச்.05ல் ஆலோசனை

26 மாசி 2025 புதன் 03:50 | பார்வைகள் : 258
தொகுதி மறுசீரமைப்பில், தமிழகம் எட்டு லோக்சபா தொகுதிகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்காக, அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
பின், அவர் அளித்த பேட்டி:
அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட் குறித்து பல்வேறு கோரிக்கைகளை, துறை அதிகாரிகள் விரிவாக எடுத்து கூறினர். அடுத்து மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்தோம். தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தலைக்கு மேல் கத்தி
எனவே, வரும் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள, 40 கட்சிகளை அழைக்க முடிவு செய்துள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு விஷயமாக, இக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தென் மாநிலங்கள் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு, 2026ம் ஆண்டு, லோக்சபா தொகுதி எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. இது பெரும்பாலும், மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் செய்யப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது, இந்தியாவின் முக்கியமான இலக்கு. இதில் தமிழகம் வெற்றி கண்டுள்ளது.
மக்கள் தொகை குறைவாக இருக்கிற காரணத்தால், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுதும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால், தமிழகத்தில் எட்டு தொகுதிகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதாவது தமிழகத்திற்கு, 31 தொகுதிகள் தான் இருக்கும்.
மற்றொரு புறம் கணக்கிட்டுப் பார்த்தால், ஒட்டு மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கையை உயர்த்தி பிரித்தாலும், நமக்கு இழப்புதான் ஏற்படும்; நமக்கான பிரதிநிதித்துவம் குறையும்.
அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால், தமிழகத்தின் குரல் நசுக்கப்படுகிறது. இது நமது மாநிலத்தின் உரிமை சார்ந்தது.