பயங்கரவாத எதிர்ப்பில் உறுதி அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

26 மாசி 2025 புதன் 03:54 | பார்வைகள் : 223
பயங்கரவாதத்தை துளியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும், என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடந்த, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின், 58வது கூட்டத் தொடரில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் கொந்தளிப்புகளால் தொடர் மோதல்கள் நிகழ்கின்றன. அதனால் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்ளும்போது நல்லுறவுகள் உடைந்து, நிலைமை நிச்சயமற்றதாகவும், நிலையற்றதாகவும் மாறி வருகிறது.
மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் இந்தியா எப்போதும் தீவிரமான பங்களிப்பை வழங்கி வருகிறது.
எங்கள் அணுகுமுறை, நிதி பொறுப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகிய கொள்கைகளை எப்போதும் நிலைநிறுத்தி, எங்கள் நட்பு நாடுகளின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப திறனை வளர்ப்பதிலும், மனித வளங்களையும், உட்கட்டமைப்பையும் வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
அதே நேரம், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியுடனும், சமரசமின்றியும் இருக்கிறோம். பயங்கரவாதத்தை துளியும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.