சினிமாவில் கம்பேக் கொடுக்கிறாரா ஷாலினி?

26 மாசி 2025 புதன் 08:58 | பார்வைகள் : 213
நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி கடந்த 2001-ம் ஆண்டு சினிமாவை விட்டு விலகினார். சினிமாவில் அறிமுகமான குறுகிய காலகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்றார் ஷாலினி. அவர் தமிழில் விஜய்யுடன் காதலுக்கு மரியாதை மற்றும் கண்ணுக்குள் நிலவு, அஜித்துடன் அமர்க்களம், மாதவன் ஜோடியாக அலைபாயுதே, பிரசாந்த் உடன் பிரியாத வரம் வேண்டும் ஆகிய ஐந்து படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அதன்பின்னர் நடிகர் அஜித்தை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்துக்கு பின்னர் நடிகை ஷாலினி சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. பல முன்னணி இயக்குனர்கள் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார். அவர் சினிமாவை விட்டு விலகி 24 ஆண்டுகள் ஆகிறது. இதனிடையே நடிகை ஷாலினி சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ள பேச்சு அடிபட தொடங்கி உள்ளது. அதன்படி அவர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவி வருகிறது
நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த அப்டேட் வீடியோவில் ஸ்பெயில் நாட்டில் உள்ள ஒரு பங்களா காட்டப்பட்டது. அது மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரில் வந்த பங்களா ஆகும். அந்த பங்களாவில் தான் குட் பேட் அக்லி படப்பிடிப்பையும் நடத்தி இருக்கிறார்கள். அந்த பங்களா முன்பு அஜித்தும் ஷாலினியும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
இதனால் குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி கேமியோ ரோலில் நடித்திருக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. சிலரோ அவர் ஷூட்டிங் பார்க்க அங்கு சென்றிருக்கலாம் என கூறி வருகின்றனர். ஆனால் எது உண்மை என்பது விரைவில் தெரியவரும். ஒரு வேளை ஷாலினி இப்படத்தில் நடித்திருந்தால், அஜித்துக்கு ஜோடியாக அவர் 25 ஆண்டுகளுக்கு பின் நடிக்கும் படமாக இது அமையும். அதுமட்டுமின்றி ஷாலினியின் கம்பேக் படமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.