பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம்: விஜய்

26 மாசி 2025 புதன் 11:21 | பார்வைகள் : 297
எப்போது பார்த்தாலும், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவோம். ஜனநாயக முறையில் அகற்றுவோம்,'' என்று, சென்னையில் நடந்த த.வெ.க., இரண்டாம் ஆண்டு விழாவில், நடிகர் விஜய் பேசினார்.
நடிகர் விஜய்யின் த.வெ.க., 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26) மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது. விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசுகையில் பேசியதாவது;
கதாநாயகன்
வணக்கம். ஒவ்வொரு தலைவரும் வணக்கம் என்று சொல்வார்கள். நானும் சொல்கிறேன் வணக்கம். நாம் இங்கு 3 மணிநேரமாக அனைத்தையும் பார்த்து வருகிறோம். உண்மையான கதாநாயகன் இங்கு இருக்கிறார்.
மாற்றத்தின் பிரதிநிதி
விஜய்க்கு நன்றி, தமிழ்நாட்டுக்கு நன்றி.தமிழக வெற்றிக்கழகத்தில் இருப்பவர்களில் பெரும்பான்மையோர் இளைஞர்கள் தான். த.வெ.க., வெற்றி பெற்றால் அது என்னுடையது அல்ல, அது உங்களுடையது. விஜய் ஒரு தலைவர் அல்ல, அவர் ஒரு மாற்றத்தின் பிரதிநிதி. தமிழகத்தின் நம்பிக்கை.
வெற்றி, தோல்வி
த.வெ.க., புதிய கட்சி அல்ல, புதிய அரசியல் இயக்கம். உங்களுக்கு எனது ஆலோசனையோ, வியூகங்களோ தேவையில்லை. எனது அரசியல் பணி என்று இதில் ஒன்றுமே இல்லை. தேர்தலில் வெற்றிக்கும், தோல்விக்கும் என்று பங்கு ஒன்றுமே கிடையாது. வென்றால் அதற்கு நீங்களே காரணம்.
வளர்ச்சி பெறும்
அடுத்தாண்டு இங்கே உள்ள பலரும் எம்.எல்.ஏ., ஆக போகிறீர்கள். கொள்கை வகுப்பாளர்களாக இருக்க போகிறீர்கள். தமிழகத்தில் ஊழல், வகுப்பு வாதம், குடும்ப அரசியல் ஆகிய மூன்றையும் ஒழிக்க வேண்டும். இதை ஒழித்தால் தமிழகம் பல துறைகளில் பெரும் வளர்ச்சி பெறும்.
புதிய உறுப்பினர்கள்
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு இங்கு ஊழல் இருக்கிறது. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருக்கிறது. 3 ஆண்டுகளாக நீங்கள் (தொண்டர்கள்) உற்சாகமாக இருக்கின்றீர்கள். அடுத்த 100 நாட்களில் இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் 10 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க உறுதி ஏற்க வேண்டும். டிவிகே குடும்பம் 3 மாதங்களில் 10 மடங்கு பெரியதாக மாறிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உரையின் தொடக்கத்தில் வணக்கம் என்று தமிழில் சொன்ன பிரசாந்த் கிஷோர் முடிவில் நன்றி என்று தமிழில் கூறி உரையை முடித்தார்.
பின்னர் விஜய் தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய உரை;
வித்தியாசம்
நாம் இங்கே வளரும் புதிய அரசியல் கட்சி. தமிழகத்தில் 1967ல் மாற்றம் நிகழ்ந்தது போல, 2026 சட்டசபை தேர்தலில் வரலாறு படைக்க போகும் கட்சி. இந்த அரசியல் என்றாலே வேற லெவல் தான்.இதில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை பார்க்கலாம்.
நண்பன், எதிரி
யார், யாரை எப்போது எதிர்ப்பார்கள் என்றே தெரியாது. எப்போது ஆதரிப்பார்கள் என்றே தெரியாது. அதை கணிக்கவே முடியாது. இதில் நிரந்தர நண்பனும், நிரந்தர எதிரியும் கிடையாது என்று கூறுகிறார்கள். அதனால் யார் வேண்டும் ஆனாலும் அரசியலுக்கு வரலாம்.
குழப்பம்
மக்களுக்கு பிடித்துப் போன ஒருவர் வந்தால் ஒரு சில பேருக்கு எரிச்சல் வரத் தான் செய்யும். இதுவரைக்கும் நாம் சொன்ன பொய்யை நம்பி மக்கள் ஓட்டு போட்டாங்க, இவர் சொல்வது எல்லாம் மக்கள் மனதுக்கு நெருக்கமாக உள்ளதே, என்று அப்படி ஒரு குழப்பம் வரும்.
ஆட்சியில் உள்ளவர்கள்
அந்த குழப்பத்தில் தான் வர்றவன், போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என்று பேச ஆரம்பிப்பாங்க. இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் நமக்கு எதிராக அப்படி பேசுகிறார்களே அது போல.
புகார்
இதோ.. முதலாம் ஆண்டை கடந்து 2ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். கட்சிக்கு பலமே அடிப்படை கட்டமைப்புதான். இதை பலப்படுத்த நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் இளைஞர்களாகவே உள்ளனர் என புகார். அப்படி இருத்தால் என்ன?
வரலாறு
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்த போது அவர்களின் பின்னால் இருந்தது இளைஞர்கள். அவர்களால் 1967, 77ல் வரலாறு நிகழ்ந்துள்ளது. நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி. ஆகவே நமது கட்சியினரும் எளிய நிர்வாகத்தினராகவே இருப்பார்கள்.
பண்ணையார்கள்
நாம் ஒன்றும் பண்ணையார்கள் அல்ல. இப்போது பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்களே இருக்கின்றனர். நாட்டோட நலன், மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் எப்போது பார்த்தாலும் பணம். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட பண்ணையார்களை நாட்டைவிட்டே அகற்ற வேண்டும். அதை ஜனநாயக முறையில் செய்ய 2026ல் இறங்க போகிறோம்.
பூத் கமிட்டி மாநாடு
கூடிய விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த போகிறோம். அன்று த.வெ.க., முதல் சக்தியாக, முதன்மை சக்தியாக நிரூபணம் ஆகும். இப்போது மும்மொழி கொள்கை என்று ஒரு புதிய பிரச்னை. இதை இங்கே செயலபடுத்த வில்லை என்றால் கல்வி நிதி மாநில அரசுக்கு தரமாட்டாங்களாம்.
ஹேஷ்டேக் செட்டிங்
எல்கேஜி, யுகேஜி பசங்கள் சண்டைபோல உள்ளது. கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை வாங்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால் இவர்கள் இருவரும் பேசி வைத்துக் கொண்டு செட்டிங் செய்து ஹேஷ்டேக் செய்து விளையாடுகின்றனர். அதாவது இவர்கள் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம். நாம் நம்ப வேண்டுமா? வாட் ப்ரோ இது வெரி ராங் ப்ரோ.
நன்றாக தெரியும்
இதற்கு நடுவில் நம்ம பசங்க உள்ளே புகுந்து சம்பவம் செய்து வெளியே வந்துவிடுகின்றனர். மக்களுக்கு இதை எல்லாம் நாம் சொல்லி புரிய வைக்க வேண்டியது இல்லை. அது அவர்களுக்கு நன்றாக தெரியும். இது சுயமரியாதை ஊரு. ஆனால் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் விட்டுக் கொடுடுக்க மாட்டோம்.
கேள்விக்குறி
எல்லா மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டும் ஆனாலும் எந்த மொழியையும் படிக்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக கல்விக் கொள்கைளை கேள்விக்குறியாக்கி அரசியல் ரீதியாக வலுக்கட்டாயமாக திணித்தால் எப்படி?
நாம் பொய் பிரசாரங்களை தள்ளி வைத்துவிட்டு உறுதியாக எதிர்ப்போம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.
இவ்வாறு விஜய் பேசினார்.