Paristamil Navigation Paristamil advert login

கெட் அவுட் இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!

கெட் அவுட் இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!

26 மாசி 2025 புதன் 11:25 | பார்வைகள் : 314


கெட் அவுட் இயக்கத்தை நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்.2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மையமாக கொண்டு கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26) மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக த.வெ.க, நிர்வாகிகள் சுமார் 2500 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டது. காலை முதலே நிர்வாகிகள், தொண்டர்கள்,ரசிகர்கள் என பாஸ் இல்லாத பலரும் ஆர்வமுடன் பூஞ்சேரி நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

காலை 8.45 மணியளவில் தமது நீலாங்கரை வீட்டில் இருந்து நடிகர் விஜய் காரில் புறப்பட்டார். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த தொண்டர்கள் விஜய்யை கண்டு உற்சாக குரல் எழுப்பி கைகளை அசைத்தனர்.

சுமார் 9.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கின் வளாகத்திற்குள் ரசிகர்கள் கரவொலிகளுக்கு இடையே நுழைந்தார். காரில் இருந்து இறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் விழாவானது சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. மேடை ஏறிய விஜய்க்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விஜய்யுடன் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் கிருஷ்ணா, ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் ஆகியோரும் மேடை ஏறினர்.

மேடையில் விஜய்யை கண்ட தொண்டர்கள் 'டிவிகே டிவிகே' என்று கட்சியின் பெயரை உச்சரித்தபடியே குரல் எழுப்ப, அவர்களை நோக்கி கைகளை அசைத்து விஜய் உற்சாகப்படுத்தினார். புதிய கல்விக் கொள்கை, மும்மொழி திணிப்புடன் சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்ப்போம் என்ற வாசகங்களுடன் கூடிய getout என்ற இயக்கத்தை முதல் கையெழுத்தை இட்டு விஜய் தொடங்கி வைத்தார்.

விழாவின் முதல் நிகழ்வாக, நாட்டுப்புறப் பாடகி கிடாக்குழி மாரியம்மாள் கலை நிகழ்ச்சி நடந்தது. பிறகு விஜய்யின் ஓராண்டு அரசியலை விளக்கும் வகையிலான ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

முன்னதாக, விழாவில் வாக்கு வங்கிக்காக சாதி, சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகர்களுக்கு கெட் அவுட் என்று பேனர் வைக்கப்பட்டு இருந்தது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்று இருந்தது.

விழுப்புரம் மாநாட்டுக்கு பின்னர் விஜய் கலந்து கொண்ட கூட்டம் என்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் விழா அரங்கில் காணப்பட்டனர். விஜய் ரசிகர்கள்,தொண்டர்கள் ஏராளமான வாகனங்களில் வந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. சென்னை-புதுச்சேரி சாலையில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபடி சென்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்