தமிழக மக்கள் பிரசாந்த் கிஷோரை மன்னிக்க மாட்டார்கள்: அண்ணாமலை

27 மாசி 2025 வியாழன் 05:13 | பார்வைகள் : 632
கோவையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
நடிகர் விஜய் நான் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்லியாக வேண்டும். உங்கள் குழந்தைக்கு பயிற்றுவிப்பது மூன்று மொழி. நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஸ்ரம் பள்ளியில், பயிற்றுவிப்பது மூன்று மொழி.
ஆனால், த.வெ.க., தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி. அதை வலியுறுத்திப் பேசுவீர்கள். பொய்யாக நாடகம் போட்டு உங்களை நம்பி வரும் த.வெ.க., தொண்டர்களை ஏமாற்றக்கூடாது.
விஜய் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளார். அவர் ஆரம்பித்த நொடியிலேயே அவருக்கு அடி விழுந்துள்ளது. அவருக்கு ஆலோசராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரஷாந்த் கிஷோரே, விஜய் கொள்கையில் உடன்பட மறுத்து கையெழுத்து இயக்கத்துக்கான பதாகையில் கையெழுத்திட மறுத்துள்ளார்.
'நானும் கிரிக்கெட் வீரர் தோனியை போல், புகழ் பெற வேண்டும்' என்று சொல்லும் பிரசாந்த் கிஷோர், எதற்காக தி.மு.க.,வை ஆட்சியில் அமரச் செய்தார்?
அந்த பாவத்துக்காகவே அவரை, தமிழக மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, ஒருமித்த கருத்தோடு யார் வந்தாலும் அவர்களுடன் பயணிக்க தயாராக இருக்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை தேர்தல் நேரத்தில், பா.ஜ., தலைமை முடிவெடுக்கும்.
வெற்றி பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுக்க, எவர்சில்வர் தட்டு டம்ளர், பிளாஸ்டிக் பொருட்களை மக்களுக்கு கொடுக்க, அரசியல்வாதிகள் இருப்பு வைத்து வருகின்றனர். அப்படியெல்லாம் பரிசு பொருட்கள் கொடுத்து, இனி மக்களை ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.