கடந்தாண்டை விட அரசின் வருவாய் 46 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிப்பு?

27 மாசி 2025 வியாழன் 05:14 | பார்வைகள் : 196
தமிழக அரசின் வரும், 2025 - 26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மொத்த செலவு, 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு, நடப்பு 2024 - 25ம் நிதியாண்டு பட்ஜெட்டை, கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அதில், அரசின் வரி வருவாய், 2.99 லட்சம் கோடி ரூபாயாகவும், செலவு, 3.48 லட்சம் கோடி ரூபாயாகவும், பற்றாக்குறை, 49,278 கோடி ரூபாயாகவும் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது.
வரி வருவாயில், வணிக வரி, பத்திரப்பதிவு, மோட்டார் வாகனத்தை உள்ளடக்கிய மாநில அரசின் சொந்த வரி வருவாயாக, 1.95 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதை விட, 10 - 15 சதவீதம் கூடுதலாக வருவாய் கிடைக்க உள்ளது.
வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட், மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமை தொகை வழங்குவதில், விடுபட்ட நபர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட, பெண்கள் நல திட்டங்களுக்கு, வழக்கத்தை விட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இதன்படி பட்ஜெட்டில் மொத்த செலவு, 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது; வருவாய், 3.45 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிகிறது.