Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியில் ஐ.எஸ் விடுத்த மிரட்டல்...

ஜேர்மனியில்  ஐ.எஸ் விடுத்த மிரட்டல்...

27 மாசி 2025 வியாழன் 05:17 | பார்வைகள் : 423


ஜேர்மனியின் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து நாடு முழுவதும் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் கொலோன் மற்றும் நியூரம்பெர்க்கில் முன்னெடுக்கப்படும் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டங்களை குறிவைத்து தாக்குதல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் மொழியில் ஐ.எஸ் கருத்துகளை வெளியிடும் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பரத்தில், உங்கள் அடுத்த இலக்கை தெரிவு செய்யுங்கள் என கோரியுள்ளனர்.

அதில் திகதியும் இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மார்ச் மாத தொடக்கத்தில் டச்சு நகரமான ரோட்டர்டாமில் திட்டமிடப்பட்ட காதல் திருவிழாவும் ஐ.எஸ் தாக்குதல் இலக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 23 அன்று நடந்த பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய கார் மோதல் சம்பவம் மற்றும் கத்தியால் தாக்குதல் உட்பட பல்வேறு சம்பவங்கள் ஜேர்மனியில் நடந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ஒரு வார காலம் நீடிக்கும் பாரம்பரிய திருவிழாவானது வியாழக்கிழமை முதல் தொடங்க உள்ளது. கத்தோலிக்க மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஜேர்மனியின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சில இடங்களில் இந்த திருவிழாக்கள் நடைபெறும்.

இதில் கலந்துகொள்ளும் மக்கள் தெருக்களில் விருந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். அத்துடன், அதிக அளவில் மது அருந்துவதுடன் நடனமாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

பெரும்பாலும் கொலோன் மற்றும் டுசெல்டார்ஃப் பகுதிகளிலே பாரம்பரிய விழாக்கள் களைகட்டும். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளனர்.

இந்த நிலையில் ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு நிகழ்வுகளுக்கான செயல்பாட்டுத் திட்டமிடல் மாற்றியமைக்கப்படுவதாக கொலோன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது வெறும் அச்சுறுத்தும் நடவடிக்கை மட்டுமே என்றும், தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் முக்கியமான பகுதிகளை அடையாளம் காணப்பட்டு 1,400 க்கும் மேற்பட்ட பொலிசார் களமிறக்கப்படுவார்கள் என்றும் அவசரகால சேவைகள் முழு வீச்சில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் திருவிழாவிற்கு செல்பவர்களின் பை மற்றும் தனிப்பட்ட முறையில் சோதனை முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்