கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் இருந்து 'தாய்-குழந்தை' சடலங்கள் மீட்பு!!

27 மாசி 2025 வியாழன் 11:38 | பார்வைகள் : 1333
கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் இருந்து இளம் தாய் மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் பிரான்சின் வடக்குப் பகுதியான Charleville-Mézières (Ardennes) நகரில் நேற்று பெப்ரவரி 26, புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் இருந்து குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டதாகவும், தடயவியல் மற்றும் குற்றவியல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலங்கள் இருந்த இடம் Gaz de France நிறுவனத்தின் முன்னாள் தலைமையகம் அமைந்திருந்த கட்டிடம் எனவும், தற்போது அது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் வேறு இடத்தில் கொல்லப்பட்டு, சடலங்களை அங்கு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.