குழந்தைகளிடம் சொல்லக் கூடாத வார்த்தைகள் பற்றித் தெரியுமா?

27 மாசி 2025 வியாழன் 12:02 | பார்வைகள் : 160
குழந்தை வளர்ப்பை பொறுத்த வரை பெற்றோரின் நடத்தை குழந்தையின் வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் குழந்தைகளின் மனதில் நேர்மறையான சிந்தனையை விதைக்க, பெற்றோர்கள் தங்கள் நடத்தையில் கவனம் செலுத்துவதும், தங்களின் நடத்தை குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப நேர்மறையாக இருப்பதை உறுதி செய்வதும் மிகவும் முக்கியம்.
சில நேரங்களில் குழந்தைகளிடம் பேசும்போது, நாம் அவர்களிடம் பேசக்கூடாத விஷயங்களை பேசிவிட நேர்கிறது. பெற்றோர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பேசும் சில விஷயங்கள் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. தங்கள் குழந்தைகளிடம் அல்லது அவர்கள் முன் பேசும் போது பெற்றோர்கள் சில விஷயங்களை மனதில் வைத்து கொண்டு பேசுவது முக்கியம். அதன்படி குழந்தைகளிடம் என்னென்ன விஷயங்களை சொல்லலாம் மற்றும் சொல்லக் கூடாது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
மகிழ்ச்சி, சிரிப்பு, கவலை, பசி என அனைத்து மனித உணர்வுகளை போலவே அழுகையும் மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒன்று தான். ஆனால் அழும் ஒரு குழந்தையிடம் அதன் பெற்றோர் "நீ ஒரு பெண்ணைப் போல அழுகிறாய்" என்று சொல்வது முற்றிலும் தவறு. இதுபோன்ற வார்த்தைகள் குழந்தையின் மனதில் அழுவது என்றால் அது பெண் தான். பெண் மட்டுமே அழ வேண்டும் போல என்ற உணர்வை ஆழமாக பதிய வைக்கிறது. குழந்தைக்கு தனது உணர்வுகளை வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது. இந்த உணர்வை அடக்க நாம் அதனை முயற்சிக்க கூடாது
ஒரு குழந்தை டீ குடிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் போது, பெற்றோர்கள் பெரும்பாலும் டீ குடிப்பதால் முகத்தின் நிறம் மாறும் என்று கூறி பயமுறுத்துவார்கள். ஆனால் நிறம் என்று இங்கே சொல்வது குழந்தைகளின் மனதில் நிற பாகுபாடு உணர்வை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக, டீ குடிப்பதால் ஏற்படும் சில தீமைகளை அவர்களுக்கு விளக்கி சொல்வது நல்லது.
சில நேரங்களில் ஒரு குழந்தை கோபமாக முகத்தை வைத்து கொண்டு ரியாக்ட் கொடுக்கும் போது பெற்றோர்கள், "இப்போது உன் முகம் இந்த விலங்கு போல இருக்கிறது, இப்படி இருக்கிறது" என்று கூறுவது குழந்தையின் மனதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விலங்குகளோடு செய்யும் ஒப்பீடு குறிப்பிட்ட குழந்தையின் சுயமரியாதையைப் பாதிக்கிறது. மாறாக கோபம் கொள்வது என்பது அவர்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் மன அமைதியையும் சீர்குலைக்கும் என்பதை விளக்கி புரிய வைக்கலாம்.
குழந்தைகளின் உடல்கள் அல்லது அவர்களின் வடிவம் குறித்து கிண்டலாகவோ, கேலியாகவோ சில பெற்றோர் பேசுவார்கள். நீ மிகவும் குண்டாக இருக்கிறாய் அல்லது ஒல்லியாக இருக்கிறாய் என்பது போன்ற கருத்துகளை கூறுவது குறிப்பிட்ட குழந்தைக்கு உணர்ச்சி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்த கூடும். மேலும் அவர்களின் சுயமரியாதையை குறைக்கும். குழந்தையின் தோற்றம் அல்லது வடிவம் குறித்து எந்த எதிர்மறை கருத்துகளையும் கூறாமல் இருப்பது முக்கியம். சுயமரியாதை என்பது தோற்றத்தை அடிப்படையாக கொண்டது அல்ல, மாறாக செயல்கள் மற்றும் எண்ணங்களை அடிப்படையாக கொண்டது என்பதை அவர்களுக்கு விளக்குவது முக்கியம்.
உங்கள் குழந்தையை எப்போதும் இன்னொரு குழந்தையுடன் ஒப்பிடாதீர்கள். "பாரு, அவன்/அவள் மிக சிறப்பாக படிக்கிறார். நீயும் படிப்பில் அந்த குழந்தையை போலவே இருக்க வேண்டும் என்று சொன்னால், அது உங்கள் குழந்தையை தாழ்வாக உணர வைக்கும். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது. உங்கள் குழந்தையை வேறு குழந்தையுடன் ஒப்பிடுவதற்கு பதில், அவர்களிடம் காணப்படும் நல்ல குணங்களை பாராட்டுங்கள், இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்கமளியுங்கள்.