நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்

28 மாசி 2125 புதன் 12:01 | பார்வைகள் : 117
நடிகை பாலியல் புகாரில் இன்று (பிப்.,28) காலை 11 மணிக்கு ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் வழங்கி இருந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இன்று மாலை, 6 மணிக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த, 2011, ஜூன் மாதம், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருமண ஆசை காட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாக, விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்த விவகாரத்தில், 12 வாரங்களுக்குள் போலீசார் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனால், வளசரவாக்கம் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, பிப்., 27, காலை, 11:00 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என, சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்; நேற்று ஆஜராகவில்லை. சீமானின் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விசாரணைக்கு ஆஜராகாததால், வளசரவாக்கம் போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள, சீமான் வீட்டின் கதவில் மீண்டும், சம்மன் ஒட்டினர். இன்று காலை, 11:00 மணிக்கு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய, 'சம்மன்' கிழிக்கப்பட்ட விவகாரத்தில், வீட்டு பணியாளர், முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டனர்.
இன்று விசாரணைக்கு ஆஜர் ஆக மாட்டேன் என சீமான் நேற்று நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அவர் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். சென்னை ஐகோர்ட்பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சீமான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் நடிகை பாலியல் புகாரில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் வழங்கி இருந்த நிலையில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இன்று மாலை, 6 மணிக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.