டிரம்பை சந்திக்கவிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

28 மாசி 2025 வெள்ளி 10:44 | பார்வைகள் : 1587
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து உக்ரைனின் கனிம வளங்களைப் பங்கிட்டு கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அமெரிக்கா, ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி பைடன் உக்ரைனுக்கு அளித்து வந்த நிதி மற்றும் ராணுவ உதவிகளையும் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவுடன் பங்கிட்டுக் கொண்டால் மட்டுமே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இதனை தொடர்ந்து டிரம்ப்பை. வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் சந்திக்க உள்ளார் ஜெலன்ஸ்கி. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் போது, உக்ரைனின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனில் லித்தியம், கிராஃபைட், கோபால்ட், டைட்டானியம் போன்ற அரிய கனிமங்களும், லந்தனம், சீரியம், நியோடைமியம், எர்பியம். ஸ்கேண்டியம் போன்ற அரிய தாதுக்களும் இருக்கின்றன.
பூமியின் பரப்பளவில் பூஜ்யம் புள்ளி 4 சதவிகிதமே கொண்ட நாட்டில் 5 சதவிகித முக்கிய கனிமங்கள் பரவி கிடக்கின்றன.
அரிய வகை என ஐரோப்பிய யூனியன் பட்டியலிட்ட 34 கனிமங்களில் 22 உக்ரைனில் கிடைக்கின்றன. ரஷ்ய படையெடுப்புக்கு முன்னர், உக்ரைனில் 7 சதவிகித டைட்டானியம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
மேலும் 5 லட்சம் டன் லித்தியமும், ஒன்றில் ஐந்து பங்கு கிராஃபைட்டும் உக்ரைனில் உள்ளதாக கூறப்படுகிறது.