ஷங்கர் படைப்பில் 'வேள்பாரி' உருவாகுமா ?

28 மாசி 2025 வெள்ளி 11:22 | பார்வைகள் : 163
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என இந்தியத் திரையுலகத்தில் பெயரெடுத்தவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடந்த வருடம் தமிழில் வெளிவந்த 'இந்தியன் 2', இந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியைத் தழுவியது. அடுத்தடுத்த இரண்டு தோல்விகளால் ஷங்கரும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.
'இந்தியன் 2' கூட பரவாயில்லை. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' என்ற 1000 கோடி படத்தில் நடித்து அடுத்து 'கேம் சேஞ்ஜர்' படத்தையும் மற்றுமொரு 1000 கோடி படமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நடிகர் ராம் சரணின் கனவு கலைந்து போனது.
ஷங்கர் அடுத்ததாக 'வேள்பாரி' படத்தை இயக்க உள்ளார். அது குறித்து ஏற்கெனவே அவர் சில பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சரித்திர நாவலான 'வேள்பாரி'யை திரைப்படமாக உருவாக்க பெரும் செலவு ஆகும். எப்படியும் 500 கோடி செலவிட்டால்தான் சிறந்த படமாக உருவாக்க முடியும்.
தமிழில் அப்படியான செலவு செய்து பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்த லைகா நிறுவனம் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போய் உள்ளது. 'இந்தியன் 2' விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் நீதிமன்றம் வரை பிரச்சனை போனது. தெலுங்கில் கொடுத்த தோல்வியால் அங்குள்ள நிறுவனங்களும் ஷங்கரை வைத்து படம் தயாரிக்க முன் வராது.
'வேள்பாரி' நாவலை ஷங்கர் படமாக்கினால் அதை மிகச் சிறந்த ஒரு படைப்பாகவே கொடுப்பார் என்பதில் ஐயமில்லை. தன்னுடைய தோல்விகளுக்கு பதிலடி தரும் விதத்தில் அந்தப் படத்தைக் கொடுக்க நினைப்பார். தமிழில் மிகப் பெரும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள அந்தப் படத்தைத் தயாரிக்க யார் முன் வருவார்கள் என்பதுதான் இப்போது பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் ஒரு கேள்வி.