பிரான்சின் எல்லைகள்! - ஒரு சுவாரஷ்ய பார்வை!!
12 ஆவணி 2017 சனி 13:30 | பார்வைகள் : 19654
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதும், தன் எல்லைகளுக்கு மேலதிக பாதுகாப்பு போட்டுள்ளது பிரித்தானியா. சரி விடுங்கள்... ஆனால் பெல்ஜியம், ஜேர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் 'நண்பேன்டா!' எல்லைகளை திறந்தே வைத்துள்ளது. பிரெஞ்சு எல்லையில் வசிக்கும் மக்கள் யாராவது காலையில் சாவகாசமாய் 'வோக்கிங்' போக நேர்ந்தால்.. பக்கத்து நாட்டுக்குள் நுழையவும் வாய்ப்புகள் உண்டு!
இன்று பிரெஞ்சு புதினத்தில்.. பிரான்சோடு ஒட்டியிருக்கும் அண்டை நாடுகளின் எல்லைகளின் தூரம் குறித்து பார்க்கலாம்.
பிரான்சுக்கும் ஜேர்மனிக்குமான எல்லைக்கோடு 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்போதல்லவா இப்படி திறந்திருக்கின்றது... பண்டைய காலத்தில் எல்லை தாண்டி கால் வைத்தால் வெட்டிவிடுவார்கள்!! இந்த எல்லையின் மொத்த தூரம் 450 கிலோ மீட்டர்கள்.
விசு படத்தில் வருவது போல் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் 'கோடு' போட்டது 1659 ஆம் ஆண்டில்! மொத்தம் 623 கிலோ மீட்டர்கள் தூரம்.
பிரான்சையும் பெல்ஜியத்தையும் நிலப்பரப்பில் இணைக்கும் தூரம் 620 கிலோ மீட்டர்கள். 1995 ஆம் ஆண்டில் இருந்து 'எல்லையும் இல்லை... தொல்லையும் இல்லை!' என நிரந்தரமாக எல்லையை அகற்றிவிட்டார்கள். இரு நாட்டிலும் பயங்கரவாதம் பெல்லி டான்ஸ் ஆடுகிறது!!
மறுபக்கம் இத்தாலி நாட்டின் எல்லை 515 கிலோமீட்டர்கள். இரண்டு நாட்டுக்கும் இடையே பல நெடுஞ்சாலைகள் ஊடறுத்து செல்கின்றன. சாலையில் உள்ள எல்லைக்கோட்டில் உங்கள் மகிழுந்தின் முன் சக்கரத்தை ஒரு நாட்டிலும்.. பின் சக்கரத்தை ஒரு நாட்டிலும் நிறுத்தி.. ஹாயாக செல்ஃபி எடுக்கலாம்!!
சுவிட்சர்லாந்தின் எல்லை 572 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு இணைந்து கிடக்கிறது. இதில் விஷேசம் என்னவென்றால் Rhine நதி, பிரான்ஸ் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் எல்லையை இணைத்து பாய்கிறது.
நடுவில் லக்ஸம்பேர்க் எனும் ஒரு குட்டி நாடு உள்ளதே... அதன் எல்லை விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. நான்கு சாலைகள் கொண்ட எல்லைகள் இருக்கின்றது.