தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல் இண்டி கூட்டணி கட்சிகளுக்கு சிக்கல்

1 பங்குனி 2025 சனி 10:00 | பார்வைகள் : 185
தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியலால், 'இண்டி' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு, ஹிந்தி பேசும் மாநிலங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், அதற்கான நிதியை வழங்க முடியாது' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது, தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்மொழி கொள்கை
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தினால், மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டியிருக்கும். அது, ஹிந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் எனக் கூறி, தி.மு.க., அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மும்மொழிக் கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என, அ.தி.மு.க., - பா.ம.க., போன்ற எதிர்க்கட்சிகளும், மத்திய பா.ஜ., அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை ஹிந்தி திணிப்பு எனக் கூறி, ஹிந்தி எதிர்ப்பு அரசியலை மீண்டும் தி.மு.க., கையில் எடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த ஒரு வாரமாக, தொண்டர்களுக்கு தினமும் கடிதம் எழுதி வருகிறார். அதில், 'ஹிந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்போம்; உயிரைக் கொடுத்தாவது தமிழை காப்போம்' என குறிப்பிட்டுள்ளார்.
உ.பி., பீஹாரில் பேசப்படும் போஜ்புரி, மைதிலி, ஆவ்தி போன்ற மொழிகளை, ஹிந்தி விழுங்கி விட்டது' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை, தி.மு.க.,வினர் அழித்து வருகின்றனர்.
தி.மு.க.,வின் தீவிர ஹிந்தி எதிர்ப்பு அரசியல், இண்டி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி., போன்ற கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் ஹிந்தி எதிர்ப்பு கருத்துகளை பகிர்ந்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் இதுபோன்ற முயற்சிகளை வைத்து, தி.மு.க.,வின் மோசமான ஆட்சி நிர்வாகத்தை மறைக்க முடியாது.
'முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு, ஹிந்தி பேசும் தொகுதியிலிருந்து எம்.பி.,யான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் என்ன பதில் கூறப்போகிறார்; ஸ்டாலினின் கருத்தை ஏற்பாரா?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னடைவு
தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியலை வைத்து, உ.பி., பீஹாரில், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி., கட்சிகளுக்கும், ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், ஹரியானா, டில்லி, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கும் வேலைகளை பா.ஜ., துவக்கி உள்ளது. தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு கருத்துகளை, அங்கு வேகமாக பரப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறுகையில், 'தமிழகத்தில் மட்டும் கட்சி நடத்தும் தி.மு.க., என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஹிந்திக்கு எதிராக பேசுவதால், தென் மாநிலங்களில் பா.ஜ.,வை பலவீனப்படுத்தலாம். ஆனால், அதுவே ஹிந்தி பேசும் மாநிலங்களில், பா.ஜ.,வை மேலும் பலமாக்கி விடும் என்பதையும் உணர வேண்டும்.
'இப்படித்தான், துணை முதல்வர் உதயநிதி, சனாதனத்துக்கு எதிராக பேசினார். அது, வட மாநிலங்களில் இண்டி கூட்டணிக்கு கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதே போன்றதொரு சூழல் தற்போது தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு பிரசாரத்துக்குப் பின் உருவாகி உள்ளது.
'இந்த ஆண்டு இறுதி யில், பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல், அம்மாநிலத்தில் 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி., கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அக்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன' என்றனர்