காற்று, நீர், மண், விவசாயம் காக்க கவனம் செலுத்த வேண்டும்: அண்ணாமலை

2 பங்குனி 2025 ஞாயிறு 05:46 | பார்வைகள் : 160
இயற்கை பாதிப்பு இல்லாத வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். வரும் காலம் சிறப்பானதாக இருக்க, காற்று, நீர், விவசாயம், மண் வளத்தை, சிறப்பு கவனம் செலுத்தி காப்பாற்ற வேண்டும்,'' என, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட, 10ம் ஆண்டு விழா மற்றும் 11ம் ஆண்டு நர்சரி துவக்க விழாவில், தமிழக பா.ஜ., தலைவரும் மற்றும் 'வீ த லீடர்ஸ் பவுண்டேஷன்' முதன்மை சேவகருமான அண்ணாமலை பேசினார்.
உயிர்ப்பிக்கிறது
அண்ணாமலை பேசியதாவது:
உலகில் வேறெந்த நகரமும், 39 ஆண்டுகளில், திருப்பூரை போன்று வளர்ச்சி பெறவில்லை; ஆண்டுக்கு, 40 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. உள்ளூர் பிரச்னை, உள்நாட்டு பிரச்னை மட்டுமல்ல, உலக அளவிலான பிரச்னை வந்தாலும், பீனிக்ஸ் பறவை போல, தன்னைத்தானே திருப்பூர் உயிர்ப்பித்துக் கொள்கிறது.
'வெற்றி' அமைப்பின், 25 ஆண்டு சேவை பிரமிக்க வைக்கிறது. இயற்கை வளத்தை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.
இத்திட்டம் போல, தமிழகத்தில் வேறெங்கும் இவ்வளவு மரக்கன்றுகள் வளர்க்கவில்லை.
இத்திட்டம், தமிழகத்தில், 'நம்பர் - 1' இடத்தில் இருக்கிறது. நட்ட மரங்களில், 88.4 சதவீத மரங்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஏறத்தாழ, 100 கி.மீ., சுற்றளவுக்கு, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
நம் ஊரில், 250 பி.பி.எம்., அளவுக்கு காற்றில் மாசு உள்ளது. டில்லி போன்ற காற்று மாசு உள்ள நகரங்களில், நுரையீரல் சிகிச்சைக்கு தனிப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
கூடிய விரைவில், தமிழகத்திலும் அதேபோன்ற சிகிச்சை பிரிவை தனியே துவக்க வேண்டிய நிலை ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்தி, இனிவரும் நாட்களில், 'கிளீன் டெக்' மற்றும் கிரீன் டெக்' தொழில்நுட்பத்தில், நிறுவனங்களை துவக்க வேண்டும்.
மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்று மாசு குறைப்பு போன்ற விழிப்புணர்வு பணிகள், உலகம் முழுதும் துவங்கப்பட வேண்டும்.
ரூ.9 லட்சம் கோடி
வரும், 2070ம் ஆண்டில், கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக்கப்படும் என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்; 2030ம் ஆண்டில் இருந்தே அப்பணிகள் வேகமெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நம் நாட்டில் ஒட்டுமொத்த ஜவுளி வர்த்தகம், மூன்று லட்சம் கோடி ரூபாயாக உள்ளது; அதை 2030க்குள், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
அதாவது, திருப்பூர் தொழில்துறையினர், 75 ஆண்டுகளாக செய்ததை, இளம் தொழில்முனைவோர், இனிவரும் ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டும்.
முன்னோர்கள் ஒரு வழியில் வளர்ந்தனர்; நாங்கள் மற்றொரு வழியில் வளர்ந்தோம்; நம் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, இன்றைய இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும்.
வாகனப் பயன்பாட்டை குறைப்பது உட்பட,இயற்கை பாதிப்பு இல்லாத வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
வரும் காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும். காற்று, நீர், விவசாயம், மண் வளத்தை, சிறப்பு கவனம் செலுத்தி காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏறத்தாழ, 100 கி.மீ., சுற்றளவுக்கு 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இன்னும் பரவலாக வளர வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். 'தினமலர்' நாளிதழின் விழிப்புணர்வால், இத்திட்டம் பட்டி, தொட்டியெங்கும் கொண்டு செல்லப்பட்டது
தண்ணீர் பிரச்னை தலைதுாக்கும்!
''நிடி ஆயோக்' சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 500 கன மீட்டருக்கு குறைவான தண்ணீர் இருந்தால் பற்றாக்குறை; 1700 கனமீட்டருக்கு அதிகமாக இருந்தால், தண்ணீர் போதிய அளவு இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டில், 40 சதவீத இடங்களில், தண்ணீர், 500 கனமீட்டருக்கும் குறைவாக இருக்கிறது. வரும், 2045ம் ஆண்டுக்குப் பின், ஆறு, குளம், குட்டைகள், நீர் பகுதி, நிலத்தடி நீர் என கணக்கிட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில், கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மட்டும், 1,700 கன மீட்டருக்கு மேல் தண்ணீர் கிடைக்கும்; மற்ற மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும். அபாயகரமான நிலையை நோக்கி தமிழகம் செல்ல துவங்கியிருக்கிறது.