எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை தடுக்க வேண்டும்; பிரதமருக்கு இலங்கை மீனவர்கள் மனு

2 பங்குனி 2025 ஞாயிறு 05:50 | பார்வைகள் : 231
இலங்கை பகுதியில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்த வேண்டும், என இலங்கை வடக்கு மாகாண மீனவர்கள் இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை வடக்கு மாகாண மீனவர்கள் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்காவுக்கும், பிரதமர் மோடிக்கும் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் மீன் பிடித்துறை இலங்கை கடலையே நம்பியுள்ளது. புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய மீன்பிடி முறைகளில் முதலீடு செய்யக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் அத்துமீறி முல்லைத்தீவு, யாழ்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்ட இலங்கை கடற்பரப்பில் நுழைந்து தொழிலில் ஈடுபடும் இந்திய மீன் பிடிபடகுகளால் எங்கள் மீனவர்களின் வலைகள், தொழில் உபகரணங்கள் பாதிக்கப்படுகின்றன.
இந்திய மீனவர்களின் இழுவை மடிகள் எங்கள் கடலின் வளங்கள் அனைத்தையும் சேதமாக்குகிறது. இதன் மூலம் சிறிய மீன் இனங்கள் முதல் கடல் புற்கள், கடல் பாறைகள் போன்ற மீன் உற்பத்தியாகும் இடங்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.
நுாற்றுக்கணக்கான படகுகள் எல்லை தாண்டி நுழைந்து எமது கரையை ஆக்கிரமித்து கடல் தொழிலில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை கண்டிக்கிறோம். இந்திய மீனவர்களை கைது செய்யவும், படகுகளையும் பறிமுதல் செய்யவும் நாங்கள் கோரவில்லை.
இந்திய அரசு, தமிழக அரசு இவர்களை உரிய முறையில் கண்காணித்தால் அத்துமீறல் அதிகளவில் இருக்காது என்பது எங்கள் நிலைப்பாடு. தொழில் நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களை கொண்டுள்ள இந்திய நாடு இதனை கண்காணித்தல் என்பது கடினமான காரியமில்லை.
அமைதி வழி போராட்டமானது இந்திய அரசுக்கு எதிராகவோ, இந்திய மக்களுக்கு எதிராகவோ இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை. இலங்கைக்குள் எல்லை தாண்டுபவர்கள் மீதான சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தி எல்லை தாண்டும் இந்திய மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
மனுவை இலங்கையில் உள்ள இந்திய துாதரகம்மூலம் பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.