ஈஷா யோகா மையம் சென்றது என் தனிப்பட்ட விருப்பம்; விமர்சனத்துக்கு கர்நாடகா துணை முதல்வர் பதில்

2 பங்குனி 2125 வெள்ளி 12:58 | பார்வைகள் : 126
மகா சிவராத்திரி விழாவுக்காக, கோவை ஈஷா யோகா மையம் வந்து சென்றது தொடர்பான சக கட்சியினர் புகார்களுக்கு, கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் துணை முதல்வராக இருப்பவர் சிவக்குமார். இவர், சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று வழிபட்டார். இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றார். அமித் ஷா பங்கேற்ற, சத்குரு நடத்திய விழாவில் சிவக்குமார் பங்கேற்றது தவறும் என்றும், அவர் ஆர்.எஸ்.எஸ்.,க்கு நெருக்கமாகி விட்டார் என்றும், எதிர் கோஷ்டி காங்கிரஸ் கட்சியினர் புகார் கிளப்ப ஆரம்பித்தனர்.
இது குறித்து சிவக்குமார் கூறியதாவது: சத்குரு கர்நாடகாவை சேர்ந்தவர். அவர் காவிரி நீர் விவகாரத்துக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். அவர் நேரடியாக வந்து எனக்கு அழைப்பு விடுத்தார். ஏராளமானோர் அவரை பின் தொடர்கின்றனர். சிறப்பான பல பணிகளை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
அந்த விழாவில், பல எம்.எல்.ஏ.,க்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதனால் நானும் பங்கேற்றேன். அது என் தனிப்பட்ட நம்பிக்கை; விருப்பம்.என் தொகுதியில் உள்ளூர் மக்கள், 100 அடி உயரத்தில் ஏசுநாதர் சிலை நிறுவினர். உடனே பா.ஜ., கட்சியினர் என்னை, 'ஏசுகுமாரா' என்று கூறினர்.
நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன். அனைத்து சமூகத்தினரையும் விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கையானது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைப்பதே. எனவே தான் அந்த விழாவில் நான் பங்கேற்றேன். சிலருக்கு அது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். இவ்வாறு சிவக்குமார் கூறினார்.