இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்…? காசாவில் மீண்டும் போர் மூளும் அபாயம்

2 பங்குனி 2025 ஞாயிறு 06:02 | பார்வைகள் : 386
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் சனிக்கிழமை முடிவடைகிறது.
இதனால், காசாவில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 19-ம் திகதி தொடங்கிய இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் மூலம், 33 இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அதற்கு பதிலாக இஸ்ரேல் சுமார் 19,000 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
ஆனால், முக்கியமான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் எகிப்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த ஒப்பந்தத்தின்படி, இரண்டாம் கட்டத்தில் ஆண் வீரர்கள் உட்பட உயிருடன் இருக்கும் அனைத்து இஸ்ரேல் பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
மேலும், இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்.
மூன்றாம் கட்டத்தில், காசாவில் பெரிய அளவிலான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் இன்னும் இரண்டாம் கட்டம் குறித்த தெளிவான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
இஸ்ரேலின் தற்போதைய நிலைப்பாடு: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சுவார்த்தைகளை முன்னேற்றுவதற்காக எகிப்துக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினார். ஆனால், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இரண்டாம் கட்டத்திற்கு செல்வதை விட, தற்போதைய கட்டத்தை நீட்டிப்பதன் மூலம் கூடுதல் பிணைக் கைதிகளை விடுவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
ஹமாஸின் தற்போதைய நிலைப்பாடு: ஹமாஸ் முதல் கட்டத்தை நீட்டிக்கும் கருத்தை நிராகரித்துள்ளது. இரண்டாம் கட்டத்தில் அனைத்து பிணைக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க தயாராக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
பிலடெல்பி வழித்தடம்: பிலடெல்பி வழித்தடம்(Philadelphi Corridor) குறித்த விவகாரம் முக்கிய சர்ச்சையாக உள்ளது.
ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த எல்லைப் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறத் தொடங்க வேண்டும். அடுத்த வார இறுதிக்குள் முழுமையாக வெளியேற வேண்டும்.
இஸ்ரேல் இந்த காலக்கெடுவை கடைபிடிக்க தவறினால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கருதப்படும்.
இந்நிலையில், போர் நிறுத்தம் உடனடியாக முடிவுக்கு வராது, அதே நேரத்தில் அடுத்த கட்டத்திற்கு விரைவாக மாறவும் வாய்ப்பில்லை என்று சர்வதேச நெருக்கடி குழுவின் ஆய்வாளர் மேக்ஸ் ரோடெண்டெக் தெரிவித்துள்ளார்.