சாம்பியன்ஸ் டிராபி 2025 - இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

2 பங்குனி 2025 ஞாயிறு 06:47 | பார்வைகள் : 140
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 'பி' பிரிவு லீக் ஆட்டம் கராச்சியில் இன்று (மார்ச் 1ம் திகதி) நடைபெற்றது.
இப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர்கள், தென் ஆப்பிரிக்காவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
இதனால் 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 179 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 37 ஓட்டங்கள் சேர்த்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கோ ஜான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வான் டெர் டுசென் மற்றும் கிளாசென் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். கிளாசென் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 29.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 181 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 'பி' பிரிவில் 5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியதுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.