Paristamil Navigation Paristamil advert login

கூட்டணி இல்லை என சொன்ன பிரசாந்த் கிஷோரால் விஜய் அதிர்ச்சி!

கூட்டணி இல்லை என சொன்ன பிரசாந்த் கிஷோரால் விஜய் அதிர்ச்சி!

3 பங்குனி 2025 திங்கள் 07:33 | பார்வைகள் : 150


அதிகாரபூர்வமற்ற நபர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் பங்கேற்று தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளை, தமிழக மக்களும், கட்சி தொண்டர்களும் நம்ப வேண்டாம்' என, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்த் கூறியுள்ளார். இந்த அறிக்கையின் வாயிலாக, வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசிய பேச்சுகளுக்கும், தன் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார்.

தங்கள் கட்சியால் விமர்சிக்கப்படும் முக்கிய கட்சியின் வலியுறுத்தலின் அடிப்படையிலேயே, எந்தக் கட்சியுடனும் சேர விடாமல், தன் கட்சியை மடைமாற்ற காய் நகர்த்தப்படுகிறதோ என்ற சந்தேகம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளதாக, கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக தயாராகி வருகிறது. அக்கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுப்பதற்காக, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் அவர் பங்கேற்றார்.

அவர் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்த, சில பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார். மும்மொழி கொள்கை தொடர்பான கையெழுத்து இயக்கத்திற்கு வைக்கப்பட்ட பேனரில், கையெழுத்திட பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டார்.இது, கட்சி தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது; விமர்சனங்களும் அதிகரித்தன.

தனித்து போட்டி


இந்நிலையில், தனியார் 'டிவி'க்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க.,வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்காமல், தனித்து போட்டியிடும்' என தெரிவித்தார்.

இதனால், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்பிய சிறிய கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளன. இது, கட்சிக்கு தேர்தலில் பின்னடையை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு பதிலடி தரும் நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழகம் கையில் எடுத்துள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:

செய்தி ஊடகங்களில் நடக்கும் விவாத நிகழ்ச்சிகளில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள கொள்கை பரப்பு மற்றும் செய்தி தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டும், கட்சியின் கருத்து மற்றும் நிலைப்பாடு.

கட்சி உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்கு பாராட்டு, ஊக்கத்தொகை, கட்சி மாநாடு, ஆண்டு விழா என தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன், மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களாக சித்தரித்து, ஊடக விவாதங்களில் பங்கேற்க செய்கின்றன. அதன் வாயிலாக திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்கின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அல்லது அவரின் ஒப்புதலோடு கட்சி தலைமையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் பங்கேற்று தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வ கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல.

எனவே, அதிகாரபூர்வமற்றவர்கள் கட்சி பெயரை பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் பங்கேற்று தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளை, தமிழக மக்களும், கட்சி தொண்டர்களும் நம்பவோ, ஏற்றுக் கொள்ளவோ வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுலபமல்ல


தற்போதைய குழப்பங்கள் குறித்து, த.வெ.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

த.வெ.க., பொதுச்செயலர் பெயர் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டாலும், அது யாரைக் குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். கட்சி துவங்கி ஓராண்டை கடந்து விட்டாலும், இன்னும் ஒரு தேர்தலைக்கூட எதிர்கொள்ளவில்லை.

வியூக வகுப்பாளர்கள் வாயிலாக, தேர்தலுக்கான வியூகங்கள் பலமாக வகுக்கப்பட்டாலும், பலமான அரசியல் இயக்கங்களை எதிர்கொண்டு, தேர்தலை எப்படி எதிர்கொள்வது என புரியாத நிலையில் தான் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் உள்ளனர்.

அதனால் தான், துவக்கத்திலேயே இப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதோடு, கட்சி யாரை எதிர்த்து போட்டியிட்டு வீழ்த்த நினைக்கிறதோ, அவர்களெல்லாம் பல காலமாக பல தேர்தல்களை சந்தித்து அனுபவம் வாய்ந்தவர்கள்.

தேர்தலில் எதிரியை எப்படியும் வீழ்த்தியாக வேண்டும் என்ற நுட்பங்கள் அறிந்தவர்கள். எந்த ஆயுதம் எடுத்தும் தேர்தல் வெற்றியை பெறக்கூடிய வித்தை கற்றவர்கள். அவர்களை எதிர்கொண்டு வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல.

'ஸ்லீப்பர் செல்'கள்


த.வெ.க., தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கும் வலுவான தமிழக அரசியல் கட்சிகளின் நுட்பமான அரசியலுக்கு மத்தியில், விஜய் எவ்வளவு துாரம் தாக்குப் பிடிப்பார் எனவும் தெரியவில்லை.

அவர் நம்பும் பலரே, எதிர் தரப்பினரின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ளது.

முதலில் தான் ஒரு சூப்பர் நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து, தந்திரங்கள் அறிந்த அரசியல் தலைவர் என, விஜய் களத்துக்கு வந்து தெளிவான அரசியல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, தேர்தலில் அவர் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்