இது தமிழகத்தின் உரிமை; கவுரவம் பார்க்காதீங்க; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

3 பங்குனி 2025 திங்கள் 07:34 | பார்வைகள் : 147
வரும் மார்ச் 5ம் தேதி நாம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். இவர்கள் என்ன அழைப்பது நாம் என்ன போவது என்று கவுரவம் பார்க்கதீங்க' என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க நாகை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தி.மு.க., நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வருகிற 5ம் தேதி நாம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பெரும்பாலும் கட்சியினர் வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் நாங்கள் வர வாய்ப்பு இல்லை, வர முடியாது என்றும் செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
நான் அவர்களை எல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவது, வர முடியாது, வர இயலாது என்று சொல்லி இருப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இது தனிப்பட்ட பிரச்னை அல்ல. இது தனிப்பட்ட கட்சி சார்ந்தது அல்ல. இதனை அரசியலாக பார்க்காமல், தமிழகத்தின் உரிமைக்காக என்பதை உணர்ந்து முடிவெடுங்கள்.
தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தால் தான் நாம் உரிமையை மீட்க முடியும். எனவே, அனைவரும் கவுரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது நாம் என்ன போவது என்று நினைக்காதீர்கள். இது தமிழகத்தின் பிரச்னை, நம்ம உரிமைகள் பறிபோகும் பிரச்னை, அரசியலாக பார்க்காமல் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
இதையடுத்து, நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அரசியல் வேறுபாடுகளை ஓரம் வையுங்கள். அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழின் தனித்துவம் சிலரது கண்களை உறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் அறிவித்த திட்டங்கள்!
நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் விபரம் பின்வருமாறு: தி.மு.க., ஆட்சியில் நாகை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. நாகையில் 13 பாலங்கள் கட்டபட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
* விழுந்தமாவடி, வானமாகாதேவி ரூ.12 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
* நாகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
* வேதாரண்யம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு பணி நடைபெறுகிறது.
* நாகை நகராட்சி கட்டடம் ரூ.4 கோடியில் புதுப்பிக்கப்படும்.
* சென்னை நங்கநல்லூரில், ரூ.65 கோடியில் ஹஜ் பயண இல்லம் கட்டப்படும்.
* நாகையில் ரூ.250 கோடி புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.