அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு

3 பங்குனி 2025 திங்கள் 16:00 | பார்வைகள் : 160
தேசிய கல்வி கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,'' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
தேசிய கல்வி கொள்கை வாயிலாக தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக, ஆளும் தி.மு.க., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது: தேசிய கல்வி கொள்கையில் எந்த இடத்திலும், ஹிந்தியை மட்டும் படிக்க வேண்டும் என்று கூறவில்லை. தாய்மொழியில் கல்வி கற்பதையே தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் தமிழில் பாடம் நடத்தப்பட வேண்டும்; அதனுடன் வேறு ஒரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹிந்தி, தமிழ், ஒடியா, பஞ்சாபி என, அனைத்து மொழிகளின் வளர்ச்சியை கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது. அதன்படி, அனைத்து மொழிகளும் சமமாக பார்க்கப்படுகின்றன. ஹிந்தியை திணிக்கவில்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக மட்டுமே தமிழகத்தில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.