கம்யூனிஸ்டுகள் ஒட்டுண்ணி: நா.த.க., சீமான் கடும் ஆவேசம்

3 பங்குனி 2025 திங்கள் 18:48 | பார்வைகள் : 171
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட கட்சிகளின் ரத்தத்தை உண்ணி போல் உறிஞ்சுகின்றன. நான் திராவிட பன்றிகளை ஒழிக்க வந்த புலி,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: மலை இல்லை என்றால் மழையை பெற முடியாது. மழை இல்லை என்றால் வளம் இல்லை. அனைத்திற்கும் அடிப்படை மலை என்பதை புரிந்து, அதை காக்க, அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். நம்மால் கடைகளில் குடிநீர் வாங்கி குடிக்க முடிகிறது. மற்ற உயிரினங்கள் என்ன செய்யும் என, யாரும் சிந்திக்கவில்லை. எனவே, தண்ணீர் விற்பனைக்கு தடை விதிக்கலாம்.
மலையை அழித்து விட்டால், புதிதாக உருவாக்க முடியாது. வயிறு முழுக்க பசியுடன் விமானத்தில் பறப்பது வளர்ச்சி அல்ல. கல்வி, மருத்துவம், தண்ணீர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலை மாற வேண்டும். அண்ணா பல்கலை மாணவி பாலியல் குற்றச்சாட்டுக்கு, கனிமொழி வாய் திறந்தாரா? தினமும் பள்ளி மாணவியரை, ஆசிரியர்கள் துன்புறுத்துவதில் உங்கள் கருத்தென்ன?
அதற்கெல்லாம் பதில் கூறாமல், என் விஷயத்தில் மட்டும் கருத்து கூறுவது ஏன்? காரணம், என் மீதான நடுக்கம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட கட்சிகளின் ரத்தத்தை உண்ணி போல் உறிஞ்சுகின்றன. மும்மொழி கொள்கையில் உங்கள் நிலைப்பாடு என்ன; கேரள அரசு குப்பை கொட்டுவதில் என்ன நிலைப்பாடு என கூறுங்கள்.
கம்யூனிஸ்டுகள் கார்ப்பரேட் முதலாளிகளாகி விட்டனர். தேவை இல்லாமல் கருத்து கூறக்கூடாது. அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தின்போது, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? கேவலம் நான்கு சீட்டுகளுக்கு, அனைத்து அநீதிகளையும் சகித்துக் கொண்டு இருக்கின்றனர்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், போராட விடாமல் கைது செய்தனர். அரசு சம்பந்தப்பட்டிருப்பதால், போராட அனுமதிக்கவில்லை. புதிய கல்வி கொள்கையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன?
திராவிட பன்றிகளை வேட்டையாடி ஒழிக்க வந்த புலி நான். ஒட்டுண்ணிகள் ரத்தம் குடித்துவிட்டு, ஓரமாக சென்று விட வேண்டும். கம்யூனிஸ்ட் என ஒரு கட்சி உள்ளதா? நான் தான் உண்மையான கம்யூனிஸ்ட். இவ்வாறு அவர் கூறினார்.