தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?

3 பங்குனி 2025 திங்கள் 14:17 | பார்வைகள் : 384
அஜித்தின் குட் பேட் அக்லி படத்துடனான போட்டியில் இருந்து தனுஷ் இயக்கிய இட்லிக்கடை படம் விலகியதாக கூறப்படும் நிலையில், அஜித்தும் தனுஷும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பா. பாண்டி படத்தின் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான தனுஷ். அதன்பின்னர் 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ராயன் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்படத்தை இயக்கியதோடு அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் தனுஷ். ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் வெற்றியை ருசித்தது. இது தனுஷின் 50வது படமாகும்.
ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கிய ரொமாண்டிக் திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடித்திருந்தார். மேலும் அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இதற்கு போட்டியாக வந்த டிராகன் படம் அமோக வரவேற்பை பெற்று வருவதால் நீக் படம் ஒரே வாரத்தில் வாஷ் அவுட் ஆனது.
நீக் படம் சொதப்பினாலும், அடுத்ததாக தான் இயக்கி இருக்கும் இட்லிக்கடை படம் மூலம் நம்பிக்கையாக உள்ள தனுஷ், அப்படத்தை அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்தார். அதன்படி இப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது குட் பேட் அக்லி உடனான மோதலில் இருந்து இட்லிக்கடை படம் பின்வாங்கி உள்ளது. குட் பேட் அக்லி டீசருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தனுஷ் படம் பின்வாங்கியதாக சமூக வலைதளங்களில் பேச்சு அடிபட்டது.
ஆனால் இட்லிக்கடை படம் அஜித் படத்துடனான மோதலை தவிர்த்ததற்கு காரணமே வேறயாம். அதன்படி தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். அதனை கருத்தில் கொண்டு தான் தனுஷ் தனது இட்லிக்கடை பட ரிலீசை தள்ளிவைத்தாராம். மேலும் அஜித் - தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளாராம். இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.