Paristamil Navigation Paristamil advert login

விஜய்யை விமர்சிக்க தி.மு.க.வில் திடீர் தடை: காரணம் என்ன?

விஜய்யை விமர்சிக்க தி.மு.க.வில் திடீர் தடை: காரணம் என்ன?

4 பங்குனி 2025 செவ்வாய் 10:37 | பார்வைகள் : 145


தமிழகம் மட்டுமல்லாது கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகிவருகின்றன. 

தமிழகத்தில் கடந்த முறை அ.தி.மு.க. தொடர் வெற்றியை (2011, 2016-ம் ஆண்டுகளில்) பெற்றதுபோல், இந்த முறை நாம் பெற்றுவிட வேண்டும் என்று தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது. நடிகர் விஜய்யும் புதிதாக அரசியல் அவதாரம் எடுத்திருப்பதால், இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, விஜய், சீமான் என 5 முனைப் போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது. 

இந்த நிலையில், வரும் 14-ந் தேதி தமிழக சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான் என்பதால், அறிவிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. 

இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

பட்ஜெட்டையும் தாண்டி அரசியல் குறித்தும் பேசப்பட்டதாக பரபரப்பாக கூறப்படுகிறது. கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியை மட்டுமல்லாது, மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியையும் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார். மேலும்,"பொறுப்பு அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்" என்றும் உத்தரவிட்டு இருக்கிறார். 

குறிப்பாக, "தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்" என்று அவர் கூறியுள்ளாராம். "அப்படி ஏதாவது பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், கட்சி தலைமையில் இருந்து கருத்து தெரிவிக்கப்படும்" என்றும் சொன்னாராம். 'விஜய் பற்றிய விமர்சனங்கள் கூடாது' என்ற உத்தரவு அமைச்சர்களையும், தி.மு.க. தொண்டர்களையும் யோசிக்க செய்துள்ளது. 

இதுகுறித்து, அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது, "பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளித்ததால்தான் இன்றைக்கு அவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுவிட்டார். அதேபோன்ற நிலையை விஜய்க்கும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் தி.மு.க. தலைமை இந்த முடிவை எடுத்திருக்கலாம்" என்று கருத்து தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்