உக்ரேனில் ஒருமாத கால போர்நிறுத்தம்.. அவசரப்படுகிறாரா மக்ரோன்??!!

4 பங்குனி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1207
பரிஸ்-லண்டன் இணைந்து உக்ரேனில் ஒருமாத கால போர்நிறுத்தத்தை கொண்டுவர உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்திருந்தார். இந்த தகவல் தொடர்பில் பிரித்தானியா மெளனம் காத்து வருகிறது.
இரு நாட்கள் முன்பாக லண்டனில் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பில் மாநாடு ஒன்று இடம்பெற்றது. பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும், கனடா பிரதமரும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டுக்குப் பின்னர் ஜனாதிபதி மக்ரோன், பிரித்தானிய பிரதமர் கியஸ் ஸ்டாமர் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி செலன்ஸ்கி மூவரும் சந்தித்துக்கொண்டனர்.
அதை அடுத்து, ஜனாதிபதி மக்ரோன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த ‘ஒருமாத கால போர்நிறுத்தம்’ குறித்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆயுதப்படைகளுக்கான பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் Luke Pollard, இது குறித்து தெரிவிக்கையில், ”பரிஸ் லண்டன் அவ்வாறான ஒப்பந்தம் எதையும் கைச்சாத்திடவில்லை” என தெரிவித்தார்.
அதேவேளை, உக்ரேன் விடயத்தில் பிரான்ஸ் அவசரப்படுகிறது என ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு துணைக்குழுவின் தலைவர் Nathalie Loiseau குற்றம் சாட்டினார்.
“இந்த விடயத்தில் ஐரோப்பியர்கள் அமெரிக்கா இல்லாத 'திட்டம் B' ஒன்றை தயாரிக்க வேண்டும். அதன் பின்னரே போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, உக்ரேனிய ஜனாதிபதி செலன்ஸி, “கடுமையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இன்றி போர்நிறுத்தம் அறிவிக்கப்படமாட்டாது” என உறுதியாக தெரிவித்தார்.
அதை அடுத்து, ஜனாதிபதி மக்ரோன் இவ்விடயத்தில் அவசரப்படுவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.