லூவரில் பார்வையிடவேண்டிய ஐந்து அறைகள்! - ஒரு அட்டகாசமான பட்டியல்!!
8 பங்குனி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18308
இந்த லூவர் அருங்காட்சியகத்துக்கு எத்தனை தடவை சென்றிருப்பீர்கள்..?? அது கணக்குலயே இல்லப்பா.. என நீங்கள் முனகுவது கேட்கிறது.. எப்போது நீங்கள் சென்றாலும் மோனாலிசாவை தவறவிடுவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும்... இன்றைய பிரெஞ்சு புதினத்தில்.. லூவர் அருங்காட்கியகத்தில் நீங்கள் அவசியம் பார்வையிடவேண்டிய ஐந்து அறைகள் குறித்து பார்க்கலாம்..!!
01. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓவிய அறை!!
லூவரில் தவறவிடாமல் பார்க்கவேண்டிய முதலாவது அறை (அறை - 75) இதுதான். தளம் ஒன்றில்.. சிவப்பு வண்ண பின்னணியில்.. தொங்கவிடப்பட்டிருக்கும் மிகப்பெரிய அளவிலான ஓவியங்கள் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
மிகப்பெரிய அளவிலான இந்த ஓவியங்கள் உங்கள் கண்களை அகல திறந்து பார்க்க வைக்கும்... சில ஓவியங்கள் 20 அடி உயரத்திலும் உள்ளது. The Coronation of Napoleon எனும் ஓவியம் 9.7 மீட்டர்கள் அகலம் கொண்டது. அவசியம் தவறவிடாமல் பாருங்கள்..!!
02. Winged Victory பளிங்கு மாளிகை!!
உங்களை நிச்சயம் வாய் பிளக்க வைக்கும் ஒரு அறைதான் இது. தரை தளத்திலேயே உள்ள இந்த பகுதி முழுவதும் உங்களை வேறு ஒரு கற்பனையான உலகிற்குள் மிதக்கவிடும்.
பளிங்குகளாலான சிற்பங்கள் பல்வேறு வடிவங்களில் உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி தருவதுடன்... உங்கள் கற்பனை திறமையையும் அதிகரிக்கும். குறிப்பாக குழந்தைகளை கூட்டிச்சென்றால் தவற விடாமல் இந்த அறைக்குச் சென்று வாருங்கள்..
ஒவ்வொரு சிலைகள் குறித்தும் அதன் வரலாற்றினை பதித்து வைத்துள்ளார்கள். அவசியம் படித்து பாருங்கள்.. தவிர இங்குள்ள ஒவ்வொரு சிலையின் பெறுமதியை நீங்கள் நீங்கள் கணக்கிட 'கல்குலேட்டர்' திரை பத்தாது.
03. கண்ணாடி கூரையின் கீழ் சிற்பத்தொகுதி!!
தளம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பங்களை நீங்கள் ஆர அமர பார்த்து ரசிக்கலாம். மேலே கண்ணாடிகளாலான கூரை அமைக்கப்பட்டிருப்பதால் இயற்கை ஒளி பளிச் என வீச, சிற்ங்களின் அழகு உங்கள் கண்களை அகல திறக்க வைக்கும். Cour Marly மற்றும் Cour Puget ஆகிய சிற்பங்களை பார்வையிடவே உங்களுக்கு 20 நிமிடங்கள் ஓடிவிடும்.
தவிர பல இருக்கைகளும்.. மரங்களும் இங்கு இருப்பதால்.. கால்வலிக்க நடந்த உங்களுக்கு சிறிது ஓய்வாகவும் இருக்கும். இங்கு செல்லும் போது சிற்பங்களின் நுணுக்கங்களை கவனிக்க மறக்காதீர்கள்..!!
04. நெப்போலியன் மாளிகை!!
அரண்மனை என்பதன் உண்மையான அர்த்தத்தை விளங்கிக்கொள்ள நீங்கள் திரைப்படங்கள் பார்த்தால் மட்டும் போதாது... லூவரில் உள்ள அறை எண் 87க்கும் வர வேண்டும்.
நெப்போலியனின் பிரெஞ்சு சாம்ராட்சியம் எத்தனை புகழ் மிக்கது என்பதை 'விஷுவல்' விருந்தாக நீங்கள் பார்க்கலாம். பல சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சுவர்கள்.. சிவப்பு தங்கம் கூட்டணியில் உள்ள இருக்கைகள், ஆடம்பர விளக்குகள் அட்டகாசமான இன்னபிற பொருட்கள் என அனைத்தையும் பொறுமையாக பாருங்கள். 'சிவப்பு பின்னணியில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தில் 'ஃபிரேம்' கொண்ட நெப்போலியன் மற்றும் அவனது மனைவியின் ஓவியம்.. அதை தவறவிடாதீர்கள்!!
05. மாய படிக்கட்டுக்கள்!!
லூவரில் இந்த அறையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் தான். உதவியாளரின் உதவியை கேட்டு பெறவும். தளம் ஒன்றில் உள்ள இந்த அறைக்கு உத்தியோகபூர்வ பெயர் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. பளிங்குகளான சுவர்களும் தூண்களும்... அங்கு நிறைந்துள்ள வண்ண ஒளிகளும் இங்களுக்கு ஒரு மாய தோற்றத்தை கொடுக்கும்.
எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது என ஒரு குழப்பமான இந்த படிக்கட்டுக்கள், உங்களை 'அட.. நாம் 16 ஆம் நூற்றாண்டுக்குள் வந்துவிட்டோம் போல!' என எண்ண வைக்கும்.
அவ்ளோதாங்க... அடுத்தமுறை லூவர் சென்றால் இந்த ஐந்து இடங்களையும் தவற விடாமல் பாருங்கள்... ஆச்சரியம் நிறைந்தது லூவர்!!