Paristamil Navigation Paristamil advert login

பஞ்சாப் போலீசை நீக்கி குஜராத் போலீஸ் : எரிச்சலின் உச்சியில் மாஜி முதல்வர் கெஜ்ரிவால்

பஞ்சாப் போலீசை நீக்கி குஜராத் போலீஸ் : எரிச்சலின் உச்சியில் மாஜி முதல்வர் கெஜ்ரிவால்

27 தை 2025 திங்கள் 04:27 | பார்வைகள் : 287


டில்லி சட்டசபை தேர்தலுக்காக, பல்வேறு மாநில ரிசர்வ் போலீஸ் படை மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தனக்கு வழங்கப்பட்டு வந்த பஞ்சாப் போலீஸ் பாதுகாப்பை விலக்கிக் கொண்டதால் எரிச்சல் அடைந்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லிக்கு குஜராத் போலீஸ் படையினர் வருகை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்; அதற்கு போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டில்லியில், முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பை மத்திய அரசு அளித்துள்ளது.

கூடுதலாக டில்லி போலீசும் பாதுகாப்பு அளித்து வந்தது.டில்லி போலீசார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தனக்கான பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

குற்றச்சாட்டு


இதனால், டில்லி போலீசாரின் பாதுகாப்பை நீக்கிவிட்டு, பஞ்சாப் போலீசுக்கு கட்டணம் செலுத்தி, தன் பாதுகாப்புக்கு அமர்த்திக் கொண்டார். அவருக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் போலீஸ் சமீபத்தில் விலக்கிக் கொண்டது. இதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார். பஞ்சாப் போலீஸ் பாதுகாப்பைநீக்கிவிட்டு, பா.ஜ., ஆளுங்கட்சியாக உள்ள குஜராத் மாநில ரிசர்வ் போலீஸ் படையை தேர்தல் கமிஷன், டில்லியில் இறக்கி இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

தேர்தல் நடைமுறை


இதுகுறித்து டில்லி போலீஸ் தரப்பில் உள்ள அதிகாரிகள் சிலர் கூறியதாவது:டில்லி சட்டசபை தேர்தல் பிப்., 5ல் நடப்பதால், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க 250 கம்பெனி போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என, தேர்தல் கமிஷன் கோரியது. இதையடுத்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லை போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் உட்பட 220 கம்பெனி, டில்லிக்கு வரவழைக்கப்பட்டன.

கூடுதலாக குஜராத், ராஜஸ்தான், பீஹார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஹிமாச்சல் மாநிலங்களில் இருந்து ரிசர்வ் போலீஸ் படையின் 70 கம்பெனி வரவழைக்கப்பட்டன. இதில், குஜராத்திலிருந்து எட்டு கம்பெனி வந்துள்ளன.

இவர்கள், தேர்தலை அமைதியாக நடத்துவதில் துவங்கி, ஓட்டு எண்ணிக்கை வரை பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது. உ.பி.,யில் கும்பமேளா நடக்கிறது. அதனால், இந்த மாநிலங்களில் இருந்து போலீஸ் படைகளை அழைக்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, டில்லி போலீஸ் மற்றும் தேர்தல் கமிஷன் உத்தரவின் அடிப்படையில், கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை விலக்கிக் கொண்டதாக பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

அதே நேரத்தில், குஜராத் போலீஸ் டில்லிக்கு வரவழைக்கப்பட்டது ஏன் என்ற கெஜ்ரிவாலின் கேள்விக்கு, குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி அளித்த பதில்:முதல்வராக பதவி வகித்த ஒருவருக்கு தேர்தல் விதிகள் குறித்து தெரியாமல் இருப்பது வியப்பளிக்கிறது.

டில்லி தேர்தலுக்காக மாநில ரிசர்வ் போலீஸ் படையை அனுப்பும்படி பல்வேறு மாநிலங்களிடம், தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டது.அதை ஏற்று நாங்கள் எட்டு கம்பெனிகளை அனுப்பி வைத்தோம். இது வழக்கமான நடைமுறை தான். இதில், குஜராத் மட்டும் கெஜ்ரிவாலின் கண்களை உறுத்துவது ஏன்?இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.