ஏழாம் வட்டாரத்தில் ஒரு தெரு! - வாங்க போகலாம்...!!
6 பங்குனி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18448
வெளி ஊர்களில் இருந்தோ, நாடுகளில் இருந்தோ பரிசுக்கு வருபவர்கள் தவறவிடாமல் பார்க்கவேண்டிய ஒரு தெரு.. ஏழாம் வட்டாரத்தில் உள்ளது.
RUE SAINT-DOMINIQUE
பிரான்ஸ் என்றால் எதற்கெல்லாம் பிரபலமோ.. அவை அனைத்தும் இந்த ஒற்றை வீதியில் உள்ளது. வீதியின் ஆரம்ப புள்ளியில் நீங்கள் நின்றால் இரண்டு வீதிகளுக்கும் நடுவே உங்களுக்கு கம்பீரமாக முதலில் தெரிவது ஈஃபிள் கோபுரம் தான்!!
வீதிக்குள் நுழைந்ததும் முதலில் தெரிவது நவநாகரீக ஆடை விற்பனை நிலையங்கள் தாம். விலைகள் உங்களுக்கு ஒரு பொருட்டில்லை என்றால்.. உலகின் மிக உச்ச நாகரீகமான ஆடைகள் புத்தம் புதிய வடிவமைப்புடன் இங்கு கிடைக்கின்றன.
அடுத்ததாக, வீட்டு அலங்காரப்பொருகளுக்கான ஒரு காட்சியறை உள்ளது. மிக இதமான மெத்தைகள், சோஃபா இருக்கைகள் என இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்தால், 'பிரெஞ்சு' தேசத்துக்கே சொந்தமான 'கஃபே' நிலையங்கள் உள்ளன.. சில யூரோக்களை மேசையில் வைத்தால்.., உலகின் சுவையான தேநீர்க்களை இங்கு பருகலாம்..
தொடர்ந்தும் முன்னேறினால் சில உணவகங்களை இரு பக்கங்களிலும் காணலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான 'டெலிஸியஸ்' உணவங்கள்..
அடுத்ததாக நீங்கள் மிக முக்கியமான கடை ஒன்றை காண்பீர்கள். உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடை அது. வெளியில் பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 'கிரேப்ஸ்' பழங்களே போதும்... அக்கடையின் சாராம்சத்தை சொல்ல. பிரான்சில் கிடைக்கும் அத்தனை பழங்களும் இங்கு விற்பனைக்கு உண்டு. நீங்கள் எந்த 'சீசனில்' செல்கிறீர்கள் என்பதை பொறுத்து இது மாறுபடும்.
பிரெஞ்சு உணவுக்கு மேலும் வலு சேர்க்கும் 'வைன்' ... அது இல்லாமலா... தனி காட்சியறையே உண்டு. பல வண்ணங்களில் உள்ள வைனை பார்த்து ரசிப்பீர்களா.. இல்லை அது அடைத்து வரும் அழகழகான போத்தல்களை கண்டு ரசிப்பீர்களா.. அல்லது அதன் சுவைகளை ஒரு கை பார்ப்பீர்களா..
பட்டியல் இன்னும் முடிந்துவிடவில்லை... சில வங்கிகள்.. வெதுப்பகங்கள்.. புத்தக விற்பனை நிலையம்.. புத்தம் புதிய 'ஸ்டைலில்' முடி வெட்டிக்கொள்ள ஒரு 'சலூன்'ம் இங்கு உள்ளது.. 'முடி வெட்டுறதுக்கு எவ்ளோப்பா?' என கேட்டீர்களானால்... நீங்களே சென்று விசாரித்துவிட்டு எங்களுக்கும் சொல்லுங்கள் பாஸ்..!!