Vanessa Paradis எனும் பிரெஞ்சு அழகி!!
5 பங்குனி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 18999
பிரான்சில் 90 ஆம் ஆண்டு பிறந்தவர்களிடம் 'உங்களுக்குப் பிடித்த பாடகி யார்?' என கேட்டால், தயக்கமின்றி முதலில் வரும் பெயர் Vanessa Chantal Paradis.
பாடகி என்பதைத் தாண்டி, பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் இருந்தவர் இவர். இவர் குறித்த சில தகவல்கள் உங்களுக்காக...
Val-de-Marne இன் Saint-Maur-des-Fossés நகரில் 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி பிறந்த இவர், 1981 ஆம் ஆண்டில் இருந்து இசைத்துறையில் ஈடுபடத்தொடங்கினார்.
1983 ஆம் ஆண்டு தனது முதல் பாடலான "La Magie des surprises-parties" பாடலை உருவாக்கியிருந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், 1985 ஆம் ஆண்டு இத்தாலி கலை நிகழ்வொன்றில் அந்த பாடலை பாடினார்.
வாழ்நாளின் எதிர்பாரா திரும்பமாக அந்த பாடல் அமைந்தது. தொலைக்காட்சிகள் அந்த பாடலை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பியது. உலகம் முழுவதும் பாடல் 'ஹிட்' அடிக்க.. சர்வதேச நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் கதவை கன்னாபின்னாவென தட்டின. அப்போது அவருக்கு பன்னிரெண்டு வயது.
பின்னர், 1987 ஆம் வருடம் "Joe le taxi" எனும் பாடலை எழுதி பாடி வெளியிட்டார். அடுத்து வந்த 11 வாரங்களுக்கு 'பிரான்சின் நம்பர்.1' பாடலாக அது இருந்தது. புகழ், பொருளாதாரம் இரண்டிலும் கணிசமான உயரத்தை தனது 14 ஆவது வயதில் அடைந்தார்.
அதன் பின்னர், மிகுதி இசை வாழ்க்கையை அமெரிக்காவில் தொடர்ந்தார். அங்கிருந்து பல ஆல்பங்கள் வெளியாகின. பிரெஞ்சு-ஆங்கில வெர்ஷன் இசை வடிவங்கள் சக்கை போடு போட்டன!
அமெரிக்க பாடகர் Johnny Depp ஐ, 1998 ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டார். ஐந்து வருடங்கள் திருமண வாழ்க்கை நீடித்தது. 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
பின்னர் 2006 ஆம் ஆண்டு பிரெஞ்சு எழுத்தாளர் Samuel Benchetrit ஐ திருமணம் செய்துகொண்டார்.
இசை உலகில் உச்சத்தில் இருக்கும் போதே திரைப்படங்களிலும் நடித்தார். கோடிக்கணக்கில் ரசிகர்களை வைத்திருக்கும் Paradis, நேற்று முன் தினம் இறுதியாக César 2018 ஆம் ஆண்டு விருதுகள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Chanel நிறுவனத்தின் விற்பனை பிரதிநியாகவும் இவர் பல வருடங்களாக உள்ளார். இசையால் பலரை கட்டிவைத்திருக்கும் இவர், தற்போது 45 வயதை கடந்திருந்தாலும் இளமை குன்றாத பிரெஞ்சு அழகி தான்!!