Paristamil Navigation Paristamil advert login

முருகப்பெருமானுக்கு 180 அடி உயரத்தில் சிலை; மருதமலையில் அமைகிறது!

முருகப்பெருமானுக்கு 180 அடி உயரத்தில் சிலை; மருதமலையில் அமைகிறது!

28 தை 2025 செவ்வாய் 04:28 | பார்வைகள் : 1018


மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், 180 அடி உயரத்தில், ஆசியாவின் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார். மருதமலை அடிவாரத்தில், 180 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாஸ்டர் திட்டத்தில், பார்க்கிங் அமைப்பதற்கான இடங்கள், லிப்ட் அமைக்கும் பணி, திருமண மண்டபம் அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, சுவாமி தரிசனம் செய்தார். ஆய்வின்போது, முதன்மை செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில்,'தி.மு.க., ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. பழனியில் அன்னை தமிழிலும் குடமுழுக்கு நடந்தது.60 வயது முதல் 70 வயதிலான மூத்த குடிமக்களை, அறுபடை வீடுகளுக்கு அரசு மானியத்தில், ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வதில், இதுவரை, 1,622 பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், ஏழு முருகன் கோவில்கள் பெருந்திட்ட வரைவிற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 400 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி கோயிலில், முதல் பெருந்திட்ட வரையில், 99 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும், இரண்டாம் பெருந்திட்ட வரைவில், 50 கோடி ரூபாய் மதிப்பில் நில ஆர்ஜிதம் செய்யும் பணியும், திருத்தணியில், 183 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முதற்கட்டமாக, 6½ கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுடன், ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக, 11 கோடியில் திட்டப்பணிகளும், மூன்றாம் கட்டமாக, 23 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதேபோல், சிறுவாபுரி திருக்கோவிலில், 16 கோடி ரூபாயில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

திருச்சி, வயலூர் முருகன் கோவிலில், அடுத்த மாதம் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

அங்கும், 30 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது.

ஊட்டி, காந்தல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 16 கோடியில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஏழு முருகன் கோவில்களில் மட்டும், 872 கோடி ரூபாய் செலவில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருதமலையில் அமைக்கப்பட்டு வரும் லிப்ட் பணிகள், ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு

கொண்டு வரப்படும். மருதமலை அடிவாரத்தில், 180 அடி உயரத்தில், கல்லினாலான முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு இன்று மேற்கொள்ளப்பட்டது. சாத்தியக்கூறு உறுதி செய்யப்பட்டதும், ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட முருகன் சிலையை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்வோம். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு, தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தாண்டு முதல் மலையேறும் பக்தர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்,'என்றார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்