Guillaume Seznec கொலைவழக்கு! - ஒரு நூற்றாண்டாக நீடிக்கும் மர்மம்!!
2 பங்குனி 2018 வெள்ளி 11:30 | பார்வைகள் : 18155
பிரான்சில் இடம்பெற்ற ஒரு தொழிலதிபரின் கொலை வழக்கு நூற்றாண்டு கால மர்மமாக நீடிக்கிறது. சம்பவம் இடம்பெற்ற நாளில் இருந்து இதுவரை காலமும் விசாரணைகள், தேடுதல்கள் என எல்லாமும் செய்தாயிற்று.. மர்மம் மட்டும் புலப்படவே இல்லை.
Guillaume Seznec மற்றும் Pierre Quemeneur இருவரும் நண்பர்கள்.. தவிர இருவரும் வியாபார பங்குதாரர்கள்.
மே மாதம், 1923 ஆம் வருடம். இருவரும் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவருடன் மகிழுந்து ஒன்றில் ரென் (Rennes) நகரின் மேற்கு பகுதியில் இருந்து பரிசை நோக்கி சென்றனர். அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்திய மகிழுந்து ஒன்றை வாங்கும் நோக்கில் இவர்கள் பயணமாகியிருந்தனர்.
மூன்றாம் நாள், Seznec மாத்திரம் வீடு திரும்பினார். வரும் வழியில் மகிழுந்து பழுதடைந்ததாகவும், Quemeneur தொடரூந்தில் வருவதாகவும் குறிப்பிட்டார். இதற்கிடையில் Quemeneur, Le Havre நகரில் இருந்து 'நான் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவேன்!' என தந்தி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் ஒருபோதும் வீடு திரும்பவில்லை.
Seznec காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். தான் ஒரு அப்பாவி. என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை என சாதித்தார். சிறையில் அடைக்கப்பட்டார்.
Seznec தான் கொலை செய்தார் என்பதற்குரிய எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. சடலம் இல்லை.. ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லை.. இருவருக்கும் மனஸ்தாபமோ, சண்டையோ வாய் தகராரோ வந்ததாக வரலாறு இல்லை.. குழப்பங்கள் நீடித்தன.
இவரின் நன் நடத்தை காரணமாக ஜனாதிபதி சாள்-து-கோலினால் 1946 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில் இவர் சிறையில் இருக்கும் போது, இவரின் மனைவி மற்றும் மகள் இறந்தனர். வாழ்நாளின் மீதியை பரிசில் கழித்த இவர், தனது 69 வது வயதில் கனரக வாகனம் ஒன்று ஏற்றப்பட்டு கொல்லபட்டார். வாகனம் கைப்பற்றப்படவில்லை.
இதற்கிடையில் Quemeneur இன் மனைவியே இவரை கொன்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது. மறுபக்கம், ஒரு அப்பாவியை (Seznec ஐ) சிறையில் அடைத்தது முட்டாள் தனம் என வழக்கறிஞர் வாதாடினார்.
இந்த வழக்கு திரைப்படங்களாக மேடை நாடகங்களாக உருமாறின.. யாரை வில்லனாக்குவது... என்ற கேள்வி எழ, ஒவ்வொரு தடவையும் 'க்ளைமேக்ஸ்' மாறியது. ஒரு இடத்தில் Seznec அப்பாவியாகவும், ஒரு இடத்தில் Seznec மிகப்பெரும் கொலைகாரனாகவும், சில நாடகங்களில் Quemeneur இன் மனைவியே அவரை கொன்றதாகவும், இன்னும் சில நாடகங்கள் முடிவு சொல்லப்படாமலும் மேடையேற்றப்பட்டன.
சடலம் மீட்கப்படாமலும்... வழக்கு தீர்க்கப்படாமலும் ஒரு நூற்றாண்டை நெருங்கிவிட்டோம் நாம்!!