Paristamil Navigation Paristamil advert login

கருணை கொலைக்கு அனுமதி : கர்நாடக அரசு அதிரடி முடிவு

 கருணை கொலைக்கு அனுமதி : கர்நாடக அரசு அதிரடி முடிவு

1 மாசி 2025 சனி 03:03 | பார்வைகள் : 507


தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகளை, கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.

குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகள் கண்ணியமாக இறப்பதற்கான உரிமை உள்ளது. சட்டப்பிரிவு, 21ன் கீழ், அவர்களுக்கு இந்த உரிமை உள்ளது' என, 2018ல், ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

விதிமுறை


கடந்த, 2023ல் இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, முந்தையை உத்தரவில் சில மாற்றங்கள் செய்து, இதற்கான விதிமுறைகளை எளிதாக்கியது.

கண்ணியமான மரணத்துக்கான உரிமை தொடர்பான விஷயத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து, கருணை கொலைக்கு கர்நாடக அரசின் சுகாதாரத் துறை நேற்று அனுமதி அளித்து உள்ளது.

அதன் விபரம்:

தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்யும்படி குடும்பத்தினர் கேட்டு கொண்டால், கருணை கொலை செய்வது தொடர்பான அறிக்கை அளிக்க முதன்மை, இரண்டாம் நிலை என இரண்டு மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும். இந்த இரண்டு குழுக்களிலும் ஒரு அரசு டாக்டர் இருப்பார்.

முதன்மை குழு, நோயாளியின் உடல்நிலையை நன்கு பரிசோதிக்கும். சிகிச்சை அளித்தாலும் அவரது உடல்நிலை தேறாது என்று உறுதியாகும் பட்சத்தில், அதுதொடர்பாக அறிக்கை தயாரித்து, இரண்டாம் நிலை மருத்துவ குழுவிடம் கொடுக்கும். அந்த குழு அறிக்கையை நன்கு ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.

நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் நோயாளி கருணை கொலை செய்யப்படுவார். அரசின் இந்த உத்தரவு, கோமா நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உத்தரவு


இது குறித்து, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவின், 'எக்ஸ்' வலைதள பதிவு:

தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனுமதி வழங்கி, கர்நாடக சுகாதாரத் துறை வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த உத்தரவு பல குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்கும்.

கண்ணியமான மரணத்தை விரும்புவோருக்கு பயன் அளிக்கும். சமூகத்திற்காக தாராளமய மற்றும் சமமான மதிப்புகளை நிலைநிறுத்த எங்கள் அரசு எப்போதும் முன்னணியில் உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்