தொழில், வர்த்தகத்தில் அரசு தலையிட கூடாது

1 மாசி 2025 சனி 03:07 | பார்வைகள் : 3173
தொழில் நடத்துபவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு முழு கவனம் செலுத்த வசதியாக, அதிகாரிகள் வாயிலாக தொல்லை கொடுக்காமல் அரசு ஒதுங்கி நிற்க வேண்டும்' என்று, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று துவங்கியது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இதன்பின், பொருளாதார ஆய்வறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 436 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையில், தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்க என்ன செய்யலாம் என்ற பரிந்துரைகள், ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளன.
அவற்றில் சில இங்கே:
நாட்டில் தொழில் மற்றும் வர்த்தக துறை மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு அது மிகவும் அவசியம்.
அளவுக்கு அதிகமான உரிம கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை தளர்த்தும்பட்சத்தில், வர்த்தகம் செய்வதற்கான செலவு குறையும். அதிகப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள், தொழில் முனைவோரின் முதலீட்டு ஆர்வத்தை குறைத்து விடும்.
தொழில் துவங்குவதற்கான நடைமுறைகளையும், செலவுகளையும் அரசு குறைப்பதன் வாயிலாக, பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும். இதுவரை காணாத உலகளாவிய பிரச்னைகளை தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சந்தித்து வரும் சூழலில், சவால்களை சமாளித்து, வேலைவாய்ப்பை அதிகரிக்க இது உதவும்.
தொழில்கள் தங்களது இலக்கை அடைவதற்கு முழு கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில், அவற்றுக்கு குறுக்கே நிற்காமல், அரசு விலகி நிற்க வேண்டும்.
புவிசார் அரசியல் பிரச்னைகள், நிச்சயமற்ற வர்த்தக நிலைகள், தங்கம், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் போன்ற இறக்குமதி பொருட்களின் விலையில் ஏற்படும் அதிர்வுகள் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள தொழில் துறையினருக்கு அரசு பக்க பலமாக இருக்க வேண்டுமே தவிர, தடங்கல் ஏற்படுத்தக் கூடாது.இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பார்லிமென்டில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதில், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில் துறையினரை கவரும் வகையிலான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.