தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!
9 மாசி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18482
வெனிசுலா நாட்டின் கிழக்கு பிராந்திய கரீபியன் கடலில் மிதக்கும் குட்டி குட்டி தீவுகளில் ஒன்று தான் Martinique. இந்த தொடரின் பிரதான களம்.
1500 ஆம் வருடங்களில் அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ், அதன் பின்னர் தொடர்ச்சியாக பயணம் செய்து கண்டுபிடித்த தீவுகளில் ஒன்று தான் இந்த Martinique. பல்வேறு தரப்பினர்களுக்கு சொந்தமாக இருந்து, பின்னர் பிரான்சாக மாறிப்போனது. இன்றும் பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இந்த தீவில், அப்படி என்ன தான் இருக்கின்றது? மலைகள் மட்டும் தான்!!
கொலம்பஸ் கண்டுபிடித்ததன் பின்னர், இங்கு குடியேற்றங்கள் வந்தன. இந்த தீவு உலகின் பார்வையில் இருந்து விலகி இருந்ததால், ஏனைய பகுதிகளில் இருந்து நாகரீகங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. வெற்று மலைகளை கொண்ட இந்த தீவினை கவர யாரும் விரும்பவில்லை. பிரான்ஸ் வசம் வந்தது. பின்னர் நாகரீகம் வளர, யுத்தங்களும் வந்தன. இப்படியாக வருடங்கள் ஓட, 18 ஆம் நூற்றாண்டு பிறந்தது.
1780 ஆம் வருடம், கரீபியன் கடல் ஒரு தடவை கொந்தளித்தது. 'சுனாமி' என அறியப்படும் மிகப்பெரும் கடல் கொந்தளிப்பு அது. Huracán San Calixto என குறிப்பிடப்படும் இந்த சுனாமி, ஒக்டோபர் 10 ஆம் திகதியில் இருந்து 16 ஆம் திகதி வரை ஆறு நாட்கள் வீசியது.
Martinique தீவினை ஒரு பொருட்டாக மதிக்காத சுனாமி, வெனிசுலாவை தாக்கியது. இடையில் சிக்குண்ட Martinique தீவில் 9000 பேர்கள் உயிரிழந்தனர். கொந்தளித்த கடல் அலைகள், 320 கிலோமீட்டர்களில் வீசும் சூறாவளி.. மனித பலத்தினை எள்ளளவும் மதிக்காமல், அடித்து நொருக்கிவிட்டு சென்றது.
அவலம் என்னவென்றால்.. மருத்துவ வசதியோ.. வேறு எந்த மீட்பு வசதிகளோ அறவே இல்லாத தீவு என்பதால், கால் உடைந்தவர்களும், கை உடைந்தவர்களும்... பாதி உயிரை கையில் வைத்திருந்தவர்களும்.. தங்கள் வாழ்நாளை அங்கேயே குற்றுயிராக கழித்தனர்.
ஆனால், இது வெறும் 'டீசர்' தான் என அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை...
-நாளை.