புதிய மாதம் - புதிய மாற்றங்கள்!
1 மாசி 2025 சனி 12:34 | பார்வைகள் : 3455
இன்று பெப்ரவரி 1, புதிய மாதத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மின்சாரக்கட்டணம், சுங்கச்சாவடி கட்டணம், சில சிகரெட் பெட்டிகளுக்கான விலை, Livret A உள்ளிட்ட ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது.
மின்சாரக்கட்டணம்!
மின்சாரக்கட்டணம் இன்று பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் குறைவடைகிறது. கிட்டத்தட்ட 15% சதவீதம் இந்த கட்டணம் குறைவடைகிறது. இதனால் 24 மில்லியன் குடும்பங்கள் பயனடைய உள்ளன. வேறு ஒப்பந்தங்களில் உள்ள 10 மில்லியன் குடும்பங்கள் கடந்த மாதங்களில் உலக சந்தைக்கு ஏற்ப கட்டணங்களில் மாற்றங்களைச் சந்தித்துவருகிறமை குறிப்பிடத்தக்கது.
Livret A மற்றும் LEP!!
Livret A சேமிப்புக்கணக்குகளின் வட்டி வீதம் குறைவடைகிறது. தற்போது வழங்கப்படு வரும் 3% சதவீதத்தில் இருந்து 2.4% சதவீதமாக குறைவடைய உள்ளது.
0.5% சதவீதமாக இருந்த வட்டி வீதம் பணவீக்கம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 3% சதவீதமாக உயர்வடைந்திருந்தது. அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளின் பின்னர் தற்போது வட்டி வீதம் குறைவடைகிறது.
அதேவேளை, LEP சேமிப்புக்கணக்கின் வட்டிவீதம் 4% சதவீதத்தில் இருந்து 3.5% சதவீதமாக குறைவடைகிறது.
சுங்கக்கட்டணம் அதிகரிப்பு!
நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக்கட்டணம் (péages ) இன்று முதல் அதிகரிக்கிறது.
SAPN நிறுவனத்தின் கட்டணம் 1.14% சதவீதமாகவும், Sanef நிறுவனத்தின் கட்டணம் 0.84% சதவீதமாகவும், AREA நிறுவனத்தின் கட்டணம் 1.10% சதவீதமாகவும், APRR நிறுவனத்தின் கட்டணம் 1.08% சதவீதமாகவும், Vinci நிறுவனத்தின் கட்டணம் 0.77% சதவீதமாகவும் அதிகரிப்புக்கு உள்ளாகிறது.
வாகனப்பதிவுகளுக்கான கட்டணம் உயர்வு!!
வாகனங்களை பதிவுசெய்வதற்கான கட்டணங்கள் மூன்று மாகாணங்களில் அதிகரித்துள்ளன.
Grand-Est மாகாணத்தில் 48 யூரோக்களில் இருந்து 60 யூரோக்களாகவும், Reunion தீவில் 51 யூரோக்களில் இருந்து 57 யூரோக்களாகவும், Brittany இல் 55 யூரோக்களில் இருந்து 60 யூரோக்களாகவும் அதிகரித்துள்ளன.
சிகரெட் விலை அதிகரிப்பு!
சிகரெட் பெட்டிகளின் விலை கடந்த சில ஆண்டுகளில் தேவையான விலையேற்றத்தைச் சந்தித்த நிலையில், இன்று பெப்ரவரி 1, சனிக்கிழமை முதல் மேலும் சில சிகரெட் பெட்டிகளின் விலையும் அதிகரித்துள்ளன. குறிப்பாக Gauloises blondes சிகரெட் பெட்டிகளின் விலை 12.30 யூரோக்களில் இருந்து 12.50 யுரோக்களாக அதிகரிக்கப்படுகிறது.