ஸ்டாலின் அரசின் சாதனைகளை வெளிப்படுத்திய பொருளாதார ஆய்வறிக்கை: தமிழக அரசு பாராட்டு
2 மாசி 2025 ஞாயிறு 04:45 | பார்வைகள் : 578
முதல்வர் ஸ்டாலின் அரசின் சாதனைகளை, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை வெளிப்படுத்தி உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தமிழக அரசு அறிக்கை:
பார்லிமென்டில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட 2024 - -25ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், காலணிகள் உற்பத்தி தொழில் வளர்ச்சி, இல்லம் தேடிக் கல்வி திட்டம் போன்றவற்றில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில், 38 சதவீதம்; மொத்த தோல் பொருள்கள் ஏற்றுமதியில், 47 சதவீதம் பங்களிப்பை தமிழகம் வழங்கியுள்ளது. தோல் பொருட்கள் உற்பத்தி துறையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் புகழ் வாய்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான, 'நைக்', தைவான் நாட்டு, 'பெங்தே' நிறுவனத்துடன், தமிழகத்தில் தோல் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் செய்ய மேற்கொண்டுள்ள முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2022ல், காலணி மற்றும் தோல் பொருட்களுக்கு என்று, தனியே ஒரு கொள்கையை, தமிழகம் உருவாக்கியுள்ளது. இது, பெரிய உற்பத்தியாளர்கள், சிறிய நிறுவனங்களை ஆதரிக்கும் ஒரு விரிவான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருப்பதையும் ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது.
தமிழகத்தில், முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் ஊக்கத்தொகை முறை, மூலதன மானியங்கள், ஊதிய மானியங்கள், நில விலை மானியங்கள் போன்றவற்றை, தமிழகம் அரசு சிறப்பாக வழங்கி வருகிறது என்றும், ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தை, ஒரு புதுமையான முயற்சியாக ஆய்வறிக்கை விவரித்துள்ளது. கல்வி முறை, மாணவர்களின் சுவாரஸ்யமான செயலாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைப்பதற்காக, இத்திட்டம் துவங்கப்பட்டது.
கூடுதலாக, ஆசிரியர்களின் விளையாட்டு அடிப்படையிலான அணுகுமுறையால், குழந்தைகளின் கற்றல் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வகுப்பறைகளில் பங்கேற்பதாகவும், கணிதம், மொழித் திறன்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்றும், பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மொத்தத்தில், மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி போன்றவை குறித்து கூறியுள்ள விபரங்கள், முதல்வர் ஸ்டாலின் அரசின் சாதனைகளை வெளிப்படுத்தியுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.