விக்ரமின் தங்கலான் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
2 மாசி 2025 ஞாயிறு 14:31 | பார்வைகள் : 616
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் முதல் முறையாக நடித்த படம் தங்கலான். இந்தப் படம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது. தங்கலான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, வேட்டை முத்துக்குமார் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு திரைக்கு வந்து ஹிட் கொடுத்த படங்களின் பட்டியலில் தங்கலான் படமும் இடம் பெற்றிருக்கிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் வசூல் ரீதியாக ரூ.100 கோடிக்கும் அதிகமாக குவித்து சாதனை படைத்துள்ளது.
படத்திற்கு பலம் சேர்த்தது கதையோடு சேர்த்து பாடல்களும் தான். இந்த படத்தில் இடம் பெற்ற மினுக்கி மினுக்கி, தங்கலான் வார் பாடல், தங்கலான் ஒப்பாரி பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. அதிலும் மினுக்கி மினுக்கி பாடல் ரீல்ஸ் எடுத்து போடும் அளவிற்கு பட்டிதொட்டியெங்கும் டிரெண்டானது. இந்தப் படத்தில் விக்ரம் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அவர் இந்தப் படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என்பதை உணர முடிகிறது. அதற்கான அங்கீகாரம் இந்தப் படத்திற்காக விக்ரமுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கலான் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஜூரி விருது சென்னை திரைப்பட விழா பா ரஞ்சித்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் தங்கலான் படத்தின் இயக்குநர் கட் ரோட்டர்டோம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. தற்போது நெதர்லாந்தில் 54ஆவது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கடந்த 30ஆம் தேதி தொடங்கிய இந்த திரைப்பட விழாவில் தங்கலான் படத்தின் இயக்குநர் கட் திரையிடப்படும் தகுதியை பெற்றிருந்த நிலையில் நேற்று திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்துடன் இணைந்து ராம் இயக்கத்தில் வந்த பறந்து போ, வர்ஷா பரத் இயக்கிய பேட் கேர்ள் ஆகிய படங்களும் டோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தகுதி பெற்றுள்ளன. வரும் 9ஆம் தேதி இந்த விழா நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த வீர தீர சூரன் பார்ட் 2 படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. வரும் மார்ச் 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். எஸ் யு அருண் குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். எச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.