கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய கோரிய மனு நிராகரிப்பு!

4 மாசி 2025 செவ்வாய் 04:00 | பார்வைகள் : 3585
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'இந்த கோரிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழக கவர்னராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து, அவருக்கும் தமிழக அரசுக்குமான மோதல் போக்கு நீடித்து வருகிறது. கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது போன்ற விவகாரங்களில் தமிழக அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடி வருகிறது.
இந்நிலையில், வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் கவர்னர், தன் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இதன் வாயிலாக கவர்னர், தன் பதவிக்கான பணிகளை செய்ய மறுத்து இருக்கிறார்.
மேலும், தமிழக மக்களையும் அவமரியாதை செய்துள்ளார். எனவே, தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை உடனடியாக பதவியில் இருந்து திரும்ப அழைத்துக்கொள்ளும்படி, ஜனாதிபதியின் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை படித்துப் பார்த்த தலைமை நீதிபதி அமர்வு, 'இதுபோன்ற மனுக்களை இந்த நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. மனுவில் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் விசாரணைக்கு ஏற்புடையதல்ல. நாங்கள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு செயல்படக்கூடியவர்கள்.
'ஆனால், மனுதாரர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் அரசியலமைப்பு நடைமுறைக்கு எதிராக இருக்கிறது. எனவே இந்த வழக்கை விசாரிக்க முடியாது' எனக்கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1